‘‘ஒரு மன்னருக்கு நெருக்கடி யான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணைகொண்டு அதை எளிதாகக் கடந்துவிடுவார். அதுபோல மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடியான நேரங்களில் அவருக்கு தோள் கொடுக்க சில ராஜவிசுவாசிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஆர்.எம்.வீரப்பன்’’ என்றுபழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் கூறியிருந்தார்.
நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமியின் நாடகக் குழுவில் பணியாற்றி வந்த ஆர்.எம். வீரப்பன், அண்ணாவின் ஆலோசனைப்படி 1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக பொறுப்பேற்றார். அவரது திட்டமிடுதலும், விரைந்து செயலாற்றும் தன்மையும் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது.
எம்.ஜி.ஆர். முதன்முதலாக தயாரித்து, இயக்கி இரட்டை வேடத்தில் நடித்து பெருவெற்றி பெற்ற ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்துக்கு நிர்வாகியாக பணியாற்றினார் வீரப்பன். எம்.ஜி.ஆர்.எப்போதுமே தாராளமாக செலவுசெய்வார். ‘நாடோடி மன்னன்’ படம் அரச கதை, பிரம்மாண்ட காட்சி அமைப்புகள். அதுவரை இல்லாத புதுமையாக இடைவேளைக்குப் பிறகு படம் வண்ணத்தில் இருக்கும். படத்தின் தயாரிப்பு செலவு எகிறியது. படத்தில்கயிற்றுப் பாலம் ஒன்று வரும்.அந்த பாலத்துக்கான ‘செட்’ போட 4 லாரி நிறைய கயிறுகள்வேண்டும் என்று எம்.ஜி.ஆர்சொல்லியிருக்கிறார். படத்துக்கான செலவுகளை கவனித்து வந்த அவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி, ‘’எதற்கு 4 லாரி கயிறு, எல்லாரும் தொங்கவா?’’ என்று வெறுத்துப் போய் கேட்கும் அளவுக்கு பண நெருக்கடி.
செலவுகளை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய்தார் வீரப்பன். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டால்தான் கடன் தர முடியும் என்று ஏவிஎம் நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்த சீனிவாசன் என்பவர் கறாராக சொல்லிவிட்டார். ஒருவேளை ‘நாடோடி மன்னன்’ படம் வரவேற்பை பெறாமல் நஷ்டமாகிவிட்டால் எம்.ஜி.ஆருக்கு சிக்கல்வந்துவிடக் கூடாது என்று நினைத்த வீரப்பன், அதற்கு சம்மதிக்கவில்லை. கடனுக்கு ஈடாகபடத்தின் இலங்கை ஏரியாவிநியோக உரிமையை காட்டிஇருந்தார் வீரப்பன். அந்தவிநியோக உரிமை பத்திரத்தில்எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தில்எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்திலும் அவர் கையெழுத்துப் போட வேண்டும் என்று பிடிவாதம் காட்டினார் ஆடிட்டர் சீனிவாசன். நாட்கள் நகர்ந்தன.
வீரப்பனுக்கு திடீரென யோசனை தோன்ற எம்.ஜி.ஆரின் அனுமதியுடன் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை ‘பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக்கி அதன் பங்குதாரராக இருந்தவர் நிர்வாக இயக்குநரும் ஆனார். இப்போது ஆடிட்டர் சீனிவாசனை சந்தித்தவீரப்பன், ‘‘இலங்கை விநியோகஉரிமை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. அதனால், எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டார். இப்போது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் ஆக மாறியதோடு அதன்நிர்வாக இயக்குநரும் நான்தான். என் பெயரில்தான் கம்பெனி நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. எனவே, நான் கையெழுத்திட்டால் போதும்’’ என்று உறுதியாகச் சொன்னார். சட்ட ரீதியாகஅதை மறுக்க முடியாத நிலையில், வீரப்பனின் முயற்சியையும் பாராட்டி ஏவிஎம் நிறுவனம் கடனும் கொடுத்தது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமலேயே ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கிவிட்டார் ஆர்.எம்.வீரப்பன்!‘நாடோடி மன்னன்’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. எம்ஜிஆர் பிக்சர்சுக்காக வாங்கிய கடனை ஏவிஎம் நிறுவனத்துக்கு வீரப்பன் நாணயமாக திருப்பிச் செலுத்தி மெய்யப்ப செட்டியாரின் அன்பைப் பெற்றார்.
1984-ம் ஆண்டு மக்களவைக்கும் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவரது உடல் நிலை குறித்து திடீர் திடீரென வதந்திகள் கிளம்பும். எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகமே மக்களிடம் நிலவியது. அப்போது, தமிழக செய்தித்துறை அமைச்சராக இருந்த வீரப்பன் உண்மையை மக்களுக்கு விளக்க முடிவு செய்தார். அமெரிக்க மருத்துவமனையில் தொப்பி இல்லாமல் எம்.ஜி.ஆர். நாளிதழ்களை படிப்பது, ‘சூப்’ குடிப்பது போன்ற காட்சிகளை வீடியோ எடுத்து தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் திரையரங்குகளில் வெளியிடச் செய்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் புதிது புதிதாக அவ்வப்போது நாளிதழ்களில் வெளியாகும். அந்தப் புகைப்படங்கள் மக்களிடம் பேசுபொருளாகி தேர்தலின் போக்கையே மாற்றி அதிமுக வெற்றி பெற்றது. அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில்எம்.ஜி.ஆர். வெற்றிபெற்றார். 1985 பிப்ரவரியில் சிகிச்சை முடிந்து திரும்பி மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அமரர் ஆர்.எம். வீரப்பன்!
முதலாளி – தொழிலாளி! – தனது எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த ஆர்.எம். வீரப்பனுக்கு எம்.ஜி.ஆர். மாதசம்பளம் கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவிஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய வீரப்பன், அந்நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், இதயக்கனி உள்ளிட்ட 6 வெற்றிப் படங்களைத் தயாரித்தார். இந்தப் படங்களில் நடிக்க தனது முதலாளி எம்.ஜி.ஆருக்கே சம்பளம்கொடுத்தார். சிலசமயங்களில் வீரப்பனிடம் எம்.ஜி.ஆர்., ‘‘என்னங்க முதலாளி? என்ன விசேஷம்?’’ என்று ஜாலியாகக் கேட்பது உண்டு. கூச்சப் புன்னகையுடன் நகர்ந்து விடுவார் ஆர்.எம். வீரப்பன்!