லக்னோ: உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி இன்று (ஏப்.10) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், பயிர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் முதலான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லக்னோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர்களுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வழிவகை செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
சமஜ்வாதி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: > அனைத்து பயிர்களுக்கும், பாலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை. இதன் கணக்கீடு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி அமையும்.
> அனைத்து விவசாயிகளுக்குமான MSP-க்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்
> அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும். நிலமற்ற விவசாயிகளின் கடன் உட்பட அனைத்தும் 2024-க்குள் தள்ளுபடி செய்யப்படும்.
> விவசாயிகளுக்கான நீர்ப்பாசனம் இலவசமாக வழங்கப்படும்.
> விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
> சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற அல்லது வாடகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
> மாநிலத்தின் பிரதான விவசாய மாவட்டங்கள் அனைத்திலும் 10 கிலோமீட்டருக்கு ஒரு சந்தை அமைக்கப்படும்.
> கரும்பு விவசாயிகளுக்கான நிதியை நிலுவையில்லாமல் வழங்க ஏதுவாக ரூ.10 ஆயிரம் கோடி சுழல் நிதி ஏற்படுத்தப்படும்.
> தனியார் விவசாய கூலிகளுக்கு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் அவர்கள் கூலியின் 40 சதவீதம் வழங்கப்படும்.
> தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி ரூ.450 ஆகவும், வேலை நாட்கள் 150 ஆகவும் அதிகரிக்கப்படும்.
> நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் அமர்விலேயே ஊரக வேலை உறுதித் திட்டம் போல் நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டு அமலுக்குக் கொண்டுவரப்படும்.
> அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும்.
> தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கப்படும்.
> நாடு முழுவதுமான இளைஞர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
> அரசு தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வில் ஊழல்கள் அகற்றப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அகிலேஷ் யாதவ்: ‘நமது அதிகாரம்’ என்று தலைப்பிடப்பட்ட 20 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அகிலேஷ் யாதவ், “நாங்கள் எங்களது தேர்தல் அறிக்கைக்கு நமது அதிகாரம் எனத் தலைப்பிட்டுள்ளோம். அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும், ஊடக சுதந்திரத்தை, சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற பார்வையுடன் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டுவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சாத்தியப்படாது. அது தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சு. சாதிவாரி கணக்கெடுப்பை இனியும் தள்ளிப்போடக் கூடாது. ஆகையால் 2025க்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2029க்குள் அது முழு வீச்சில் சமூக நீதியை நிலைநாட்டும்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்,
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். அன்றைய தினம் தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.