பீஜிங்,
சீன வெளியுறவு மந்திரி வாங் யி அழைப்பை ஏற்று, ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ் சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அவர் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
சீன-ரஷிய தூதரக உறவுகளின் 75-வது ஆண்டை முன்னிட்டு இரு தரப்பினரும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். இருதரப்பு உறவுகளில் வளர்ச்சிக்கான நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பது, வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது ஆகியவை பற்றி பேசப்படும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ கூறினார்.
இந்நிலையில், சீனாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ், அந்நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யியை பீஜிங் நகரில் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதனை ரஷிய வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடக பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த கூட்டத்தின்போது லாவ்ரவ் கூறும்போது, ரஷியாவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, மேற்கத்திய நாடுகளின் கடுமையான நெருக்கடி இருந்தது. உக்ரைன் அரசாட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து இருந்தன. ரஷிய நகரங்கள் மீது அடிக்கடி குண்டுமழை பொழிந்தன.
இதனால், மக்கள் பலர் உயிரிழந்தனர் என அவர் கூட்ட தொடக்கத்தில் குறிப்பிட்டார். இதனை ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. தொடர்ந்து அவர், ரஷிய தேர்தல் நடைமுறையை ஹேக்கிங் செய்ய எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், வாக்கு பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. ரஷிய வாக்காளர்களின் சுதந்திரம் மற்றும் வாக்களிக்கும் உரிமையை வெளிப்படுத்தும் தைரியம் ஆகியவற்றை எதுவும் தடுக்கவில்லை என லாவ்ரவ் கூறினார்.
ரஷிய மக்களின் அரசியலமைப்புடன் கூடிய, இறையாண்மைக்கான உரிமைகளை உறுதி செய்வதில் ஆதரவாக இருந்ததற்காக சீனாவுக்கு தன்னுடைய நன்றியையும் அவர் அப்போது தெரிவித்து கொண்டார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
ரஷியா மற்றும் சீனா இடையேயான விரிவான நட்புறவு மற்றும் ராஜதந்திர உரையாடல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரியின் அறிக்கை தெரிவிக்கின்றது.