நீண்ட நாள்களாகவே, `தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடி செயல்படுகிறார்’ என பா.ஜ.கவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். மறுபக்கம் தி.மு.கவினர் அக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்கள். இந்த சூழலில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “கரூர் கம்பெனி என்று சொல்லக்கூடியவர்கள் வந்துவிட்டார்கள். சிறையில் இருந்து கொண்டு போனில் பேசுகிறார். இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர் சொன்னதை டி.ஆர்.பி.ராஜா செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் கோவை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தங்க சுரங்கத்தை கொட்டினால் கூட பா.ஜ.க கூட்டணிதான் வெற்றி பெரும்” என்றார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து பெரம்பலூரில் பேசிய திமுக அமைச்சர் கே.என்.நேரு, “தி.மு.கவுக்கு திருச்சி கிடைத்திருந்தால் முத்தரையர்கள் நினைப்பது நடந்திருக்கும். கடைசி நேரத்தில் கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அனைவருடனும் இணைந்து பணியாற்றி, ஒவ்வொருவரையும் முன்னேற்றம் அடைய செய்வதுதான் தி.மு.கவின் எண்ணம். மிகப் பெரிய சமூகமாக முத்தரையர்கள் உள்ளனர். நாங்களும் உங்களை ஒட்டித் தான் இருப்போம். வாய்ப்பு கிடைக்கும்போது, மிகப் பெரிய அளவுக்கு இந்த சமூகம் வளரும். அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெறும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
நடக்கவிருக்கும் தேர்தல் முக்கியமானது. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லாததால், தி.மு.க-வுக்காக அந்த வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும், அவர் பணி செய்யாமல் இல்லை. முடிந்த அளவுக்கு அவரும் தேர்தல் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும். திருச்சியில் 9 தொகுதிகள் இருக்கின்றன. அங்கு ரூ.3,000 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், நாம் நினைக்கும் பணி நடக்கும்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “செந்திபாலாஜி பேசினாரா என தெரியவில்லை. சிறைவிதிகளை மீறி செயல்படுகிறார் என தேர்தல் ஆணையத்தில் அண்ணாமலை புகார் அளிக்க வேண்டியது தானே?. இதன் மூலம் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி இன்னும் அண்ணாமலையை பயமுறுத்தி கொண்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. ஜெயிலில் இருப்பவரை பற்றி இவர் எதற்கு நினைக்கிறார். இஞ்சி தின்னும் போது குரங்கு நியாபகம் வரக்கூடாது. எப்போதும் செந்தில்பாலாஜி நியாபகத்திலேயே இருக்கிறார், அண்ணாமலை. அவரது பெயர் உங்களை பயமுறுத்துவதால்தான் ஜெயிலில் வைத்திருக்கிறீர்களா என்ற கேள்வி எழுகிறது?” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY