புதுச்சேரி: தேசியக் கட்சிகள் நேரடியாக போட்டியிட்டும் புதுச்சேரியில், பிரச்சாரத்துக்கு பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை வரவில்லை. புதுச்சேரிக்கு யாராவது வருவார்களா? என அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக ஒரே நாளில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இன்னும் ஒருவாரக் காலம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்துக்கு கால அவகாசம் உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது புதுச்சேரிக்கு பாஜகவிலிருந்து பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் பிரச்சாரத்துக்கு வந்தனர். அதேபோல் காங்கிரஸ் தரப்பிலும் பலரும் பிரச்சாரத்துக்கு வந்தனர்.
தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு பல தலைவர்கள் வருகின்றனர். குறிப்பாக பாஜக தரப்பில் பிரதமர் மோடி ஆறு முறை தமிழகத்துக்கு வந்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோரும், மத்திய அமைச்சர்களும் தமிழகம் வந்துள்ளனர். ஆனால் புதுச்சேரிக்கு இம்முறை பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் யாரும் இதுவரை பிரச்சாரத்துக்கு வரவில்லை.
அதேபோல் இண்டியா கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கும் அக்கட்சியின் சார்பில் தேசியத் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.அதேபோல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இதுதொடர்பாக பாஜக, காங்கிரஸைச் சேர்ந்த புதுச்சேரி தொண்டர்கள், நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரியில் தேசியக்கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. இரு தேசியக்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரிக்கு பாஜக தலைமையிலிருந்து யாரும் வரவில்லை. பிரதமர் தமிழகத்துக்கு பலமுறை வந்தும் புதுச்சேரிக்கு வராதது வருத்தமளிக்கிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை. வரும் 17ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முக்கியத் தலைவர்கள் யாராவது வருவார்கள் என்று காத்துள்ளோம்” என்றனர்.