மலையாள சினிமாவின் அஜித்தாக மாறிவரும் பிரணவ் மோகன்லால்
மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில் என நட்சத்திர வாரிசுகள் அனைவரும் கொஞ்சம் முன்னதாக சினிமாவில் களம் இறங்கி விட, சற்று தாமதமாகவே நடிகராக அறிமுகமானவர் மோகன்லாலின் மகன் பிரணவ். முதலில் இயக்குனராகும் ஆசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
ஆனாலும் அவரது டைரக்ஷனிலேயே ஆதி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டு, ஹிருதயம் என மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ள பிரணவ் தற்போது வினித் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வருஷங்களுக்கு சேஷம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 11ல் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் வினித் சீனிவாசன், அவரது தம்பி தியான் சீனிவாசன் ஆகியோர் தான் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். பிரணவ் எந்த நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
இதுபற்றி இயக்குனர் வினித் சீனிவாசன் கூறும்போது, “பிரணவ்வை பொறுத்தவரை படத்தில் நடித்தவுடன் தனது வேலை முடிந்து விடுவதாகவும் அதைத்தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள நான் விரும்புவதில்லை என்றும் தனக்கென ஒரு பிரைவசி இருப்பதாகவும் கூறி ஒதுங்கி கொள்கிறார். அது அவருடைய சுபாவம் என்பதால் நாங்களும் அவரை வற்புறுத்துவதில்லை. ஒருவேளை இப்படி எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்பதால் அதுவே அவரது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி ரசிகர்களை தியேட்டருக்கு வரைவழைக்கும் யுக்தியாக கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.. பிரணவ் மோகன்லால், தான் நடித்த முதல் படமான ஆதி வெளியான சமயத்தில் தனி ஆளாக இமயமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.