ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து சாய்த்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் ஜொலித்து வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றனர்.
பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ரன் மழை பொழிகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த ஜோஸ் பட்லர் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் தொடர்ந்து சொதப்புகிறார். முதல் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். துருவ் ஜூரெல், ஹெட்மயர் போதுமான பங்களித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் மிரட்டுகிறார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் அணி அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. கடந்த இரு ஆட்டங்களில் முறையே 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 33 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும் தோற்றது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், சாய் சுதர்சனும், பந்து வீச்சில் மொகித் ஷர்மா, உமேஷ் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், விருத்திமான் சஹா காயத்தால் அவதிப்படுவது சற்று பின்னடைவாகும். அதே சமயம் வில்லியம்சன், விஜய் சங்கர், ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், ராஜஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), வில்லியம்சன், ஷரத் அல்லது விருத்திமான் சஹா, விஜய் சங்கர் அல்லது அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது