கால்நடை பண்ணை அமைக்க விரும்புபவர்கள் 50 லட்ச ரூபாய் வரை மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறலாம்…
வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் `தேசிய கால்நடை இயக்கம்’ (National Livestock Mission). இந்த திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்படுகின்றன.
இது இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. உற்பத்தி அதிகமாகும் பட்சத்தில் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, ஏற்றுமதி செய்து வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் பயன்பெற முடியும்?!
*கால்நடைகள், கோழிகள், பன்றிகள் மற்றும் தீவன உற்பத்தித் துறைகளில் இருப்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
*தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் கூட்டுறவு அமைப்புகள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள் மற்றும் பிரிவு 8 நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள்.
எவ்வளவு பணம் பெற முடியும்?!
* கிராமப்புற கோழி பண்ணைகள், செம்மறி ஆடு பண்ணை, பன்றி பண்ணை, தீவன மதிப்புக் கூட்டல் அலகு மற்றும் சேமிப்பு அலகு ஆகியவற்றை நிறுவுவதற்கு இத்திட்டத்தின் மூலம் 50% மூலதன மானியம் வழங்கப்படுகிறது.
* கோழி பண்ணை அமைப்பதற்கு 25 லட்சம், செம்மறி ஆடு பண்ணை அமைப்பதற்கு 50 லட்சம், பன்றி வளர்ப்பிற்கு 30 லட்சம், மற்றும் தீவன தொழிலுக்கு 50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
* பண்ணை அமைக்கும் திட்ட செலவில் மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரர்கள் வங்கிக் கடன்கள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து பெறலாம்.
* இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது சம தவணையாக வழங்கப்படும். முதல் தவணை திட்டத்தின் தொடக்கத்திலும், இரண்டாவது தவணை திட்டம் முடிந்த பின்னரும் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?!
* ஆன்லைன் மூலமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். https://dahd.nic.in/schemes-programmes என்ற இணையதள பக்கத்திலுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, திட்டம் தொடர்பான ஆவணங்களை அதில் பதிவேற்ற வேண்டும்.
*அடுத்த 21 நாள்களுக்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா, இல்லையா? என்ற தகவல் தெரிவிக்கப்படும்.