Tamil News Live Today:“இந்த கேரண்டிகளைத் தருவீர்களா பிரதமர் மோடி?” – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

வாக்கிங்கில் வாக்கு சேகரித்த முதல்வர்!

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இன்று மாலை திமுக, மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தேனி, திண்டுக்கல் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேனி லட்சுமிபுரத்தில் நடக்க உள்ள பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

அதற்காக நேற்று இரவு தேனி வந்து தங்கிய முதல்வர், இன்று காலை தேனி நகர் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இதனிடையே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், “பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே… குஜராத் மாடல் – சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே… இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?

*சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்

* தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு

* ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது

* ⁠மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து

* ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400

* ⁠வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

* ⁠தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்

* அமலாக்கத்துறை – வருமான வரித்துறை – சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்

* மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்

* ⁠வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்

* கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்

* வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

முதல்வர் ஸ்டாலின்

* கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்

* சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்

* ⁠தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்

* ⁠அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்

* வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு

* ⁠சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு

* ⁠தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்

* ⁠ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன் – என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா?

இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் ‘Made in BJP’ வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்!” என குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.