புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் 4-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை பந்தாடியது. பஞ்சாப் அணியில் வில்மர் ஜோர்டான் கில் (19-வது நிமிடம், 62-வது நிமிடம்) மடிக் தலால் (43-வது நிமிடம்), லூகா மஜ்சென் (70-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.
இந்த தோல்வியின் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணியின் பிளே-ஆப் கனவு கலைந்தது. லீக் சுற்றை முடித்து விட்ட ஈஸ்ட் பெங்கால் 6 வெற்றி, 6 டிரா, 10 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டி விட்ட நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னையின் எப்.சி. (27 புள்ளி) நேற்று பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ள சென்னையின் எப்.சி, கடைசி லீக்கில் எப்.சி.கோவாவை வருகிற 14-ந்தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.