நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் முக்கியமான போட்டி நடக்கும் தொகுதிகளில் ஒன்று வயநாடு தொகுதியாகும். இங்குக் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தியும், சி.பி.ஐ வேட்பாளராக ஆணி ராஜாவும், பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
அனைத்து கட்சிகளும் தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் நடத்திவரும் நிலையில் பாஜக வேட்பாளரும் கேரள பாஜக-வின் மாநில தலைவருமான கே.சுரேந்திரன் “முதலில் வயநாடு மாவட்டத்திலுள்ள, `சுல்தான் பத்தேரி’ என்ற பகுதியின் பெயரை “கணபதிவட்டம்” என்று பெயர் மாற்ற வேண்டும்” எனப் பேசி சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார்.
“சுல்தான் பத்தேரி என்ற பகுதியின் உண்மையான பெயர் கணபதிவட்டம் தான். திப்பு சுல்தானின் படையெடுப்பிற்கு பிறகே இந்த பெயர் சுல்தான் பத்தேரி என மாற்றப்பட்டது. வயநாடு மக்களுக்கு திப்பு சுல்தான் யார்? திப்பு சுல்தானின் முக்கியத்துவம் இங்கே என்ன இருக்கிறது? கேரளாவின் மலபார் பகுதியில், குறிப்பாக வயநாட்டில் ஏராளமான இந்து கோயில்களை ஆக்கிரமித்துப் பல லட்சம் இந்துக்களை மதம் மாற்றியவர் அவர். அவரின் பெயர் இங்கு எதற்கு?
இந்த பகுதியின் பெயரைச் சுல்தான் பத்தேரி என மாற்ற முக்கிய பங்கு வகித்தது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளே. திப்பு சுல்தானை எதற்கு இவர்கள் ஆதரிக்கிறார்கள்?
நான் இங்கு வெற்றிபெற்றால் முதலில் இந்த பகுதியின் பெயரை மீண்டும் கணபதிவட்டம் என்று மாற்றுவேன். இதற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியையும் கேட்பேன்.” என கே.சுரேந்திரன் கூறினார். கே.சுரேந்திரனின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதைப் பற்றி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் டி. சித்திக், “சுல்தான் பத்தேரியின் பெயரை மாற்றுவேன் என்று கூறும் கே. சுரேந்திரனுக்கு ஒரு லட்சம் வாக்குகள் கூட இங்குக் கிடைக்காது. கடந்த தேர்த்தலை விடக் குறைந்த வாக்குகளையே இந்த முறை பாஜக கட்சி இங்குப் பெறப்போகிறது.
வயநாடு வெறுப்பின் மண் அல்ல. அன்பின் மண். இந்த மண்ணில் வெறுப்பை விதைக்கலாம் எனச் சுரேந்திரன் அல்ல அவரின் முதலாளி மோடி நினைத்தால் கூட அது நடக்காது.
இதற்கு முன்பும் வரலாற்றில் பல மாற்றங்களைக் கொண்டு வர பாஜக முயன்றுள்ளது, பல மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளனர். ஆனால் அந்த பருப்பு இங்கே வேகாது. இந்த பெயர் மாற்றும் முயற்சியை வயநாடு மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள்”. என்றார்
வயநாடு மாவட்டத்தில் முக்கியமான ஒரு பகுதி இந்த சுல்தான் பத்தேரி ஆகும். முதலில் கணபதிவட்டம் என்றே இந்த பகுதி அழக்கப்பட்டுவந்தது. மைசூர் ஆட்சியாளராக இருந்த திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது இந்த பகுதியில் ஒரு கோயிலை தனது ஆயுதங்களைச் சேகரித்து வைக்க அவர் பயன்படுத்தி வந்தார். சுல்தானின் பாட்டரி என்ற பெயரிலிருந்து தான் `சுல்தான் பத்தேரி’ என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY