பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-இன் பச்சை வழித்தட நிலையமான தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணி ஒருவரின் சட்டையில் பட்டன்கள் இல்லாததால், மெட்ரோ ஊழியர்கள் அவரைத் தடுத்து நிறுத்திய சம்பவம், பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. மேலும், சமூக வலைதளங்களில் பலரும் `மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் பாகுபாடு காட்டி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல… இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு இருந்த சக பயணி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மீண்டும் ஆடை தொடர்பான சர்ச்சையான சம்பவம், என் கண் முன்னே நடந்தேறியது. இரண்டு சட்டை பட்டன்களை தைத்துக் கொண்டு வரும்படி தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். எப்போது முதல் `நம்ம மெட்ரோ’ இப்படி மாறியது?” எனக் கேள்வி எழுப்பி, பெங்களூரு மெட்ரோ நிறுவனத்தையும், எம்.பி தேஜஸ்வி சூர்யாவையும் டேக் செய்திருந்தார்.
இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் `பயணிகள் அனைவரும் எந்தவித பாகுபாடும் இன்றி நடத்தப்படுகின்றனர்’ என விளக்கம் அளித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர், “பயணிகளிடம் பணக்காரர், ஏழை, ஆண், பெண் என்ற எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. அந்த வீடியோ அன்று நடந்த சம்பவத்தின் ஒரு பாதிதான். அந்தப் பயணியின்மீது மது வாசனை வந்ததால், அவர் மது அருந்தி இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தனர். அந்த நபரால் பெண்கள் குழந்தைகளுக்குத் தொந்தரவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, அவரை பரிசோதனை செய்ய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பின் சோதனை நடத்தப்பட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே பெங்களூரு மெட்ரோ நிலையத்தில் கிழிந்த உடை மற்றும் தலையில் பையுடன் சென்ற விவசாயி ஒருவர், ரயிலில் ஏற அனுமதிக்கப்படாதது பேசுபொருளாகி, மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக பெங்களூரு மெட்ரோ நிறுவனம் அத்தகைய செயலில் ஈடுபட்ட ஊழியரைப் பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில், மீண்டும் இத்தகைய சம்பவம் அங்கு நடைபெற்றிருப்பது, அதிர்ச்சியளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.