லாஸ் ஆல்டோஸ்: மெர்சனரி ஸ்பைவேர் என்பது வழக்கமான சைபர் குற்ற நடவடிக்கைகளை காட்டிலும் நுட்பமானது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமத்தின் சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் போன்று, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பயனரின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ் அப் தகவல்கள், பயனர் கடைசியாக எங்கு சென்று வந்தார் என்கிற லொக்கேஷன் தரவுகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் ஹேக் செய்ய முடியும்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களுக்கு ஸ்பைவேர் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்று தற்போது இந்தியா உட்பட 92 நாடுகளைச் சேர்ந்த அத்தனை ஐ-போன் பயனர்களின் தகவல்களும் திருடப்படக் கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் தற்போது அபாய சங்கு ஊதியுள்ளது.
இது தொடர்பாக ஐ-போன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ள எச்சரிக்கை குறுஞ்செய்தியில் கூறியதாவது: நீங்கள் யார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை குறிவைத்து கண்டறிய இந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய தாக்குதல் குறித்த துல்லியமான தகவல்களை ஒருபோதும் சேகரிக்க முடியாமல் போனாலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான ‘சப்போர்ட் பேஜ்’ல் (support page) மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை அப்டேட் செய்துள்ளது.