காலநிலை மாற்றம் | வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவர்: ஐ.நா. எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய அதீத வெப்ப அலையில் சிக்கி கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 24 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவர். அதீத வெப்ப அலை அவர்களுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் இந்த கோடை காலத்தில் நாம் குழந்தைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான யுனிசெப் இயக்குநர் டெபோரா கோமினி தெரிவித்துள்ளார். ஆதீத வெப்ப அலை காரணமாக குழந்தைகளுக்கு சுவாசப் பாதை நோய்கள், வெப்பம் சார்ந்த நோய்கள், ஆஸ்துமா, இருதய நோய்களால் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

சர்வதேச சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தோடு தொடர்ச்சியாக 10வது மாதமாக அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் புவியின் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளம் பகுதிகளில் உள்ள நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உச்சம் கண்டுள்ளது. இந்நிலையில் தான் யுனிசெப் குழந்தைகளுக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதீத வெப்பம் தொடர்பாக இப்போதே அறிவுரைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், தாய்லாந்து நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை மக்கள் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் அதீத வெயில் காரணமாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்துள்ளன. பிலிப்பைன்ஸ் அரசு தங்கள் நாட்டில் 2024 ஆம் ஆண்டே மிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தத் தவறினால், வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 200 கோடி குழந்தைகள் அதிக வெப்ப அலை பாதிப்புக்கு உள்ளாவர்கள் என யுனிசெப் ஆய்வானது கணிக்கிறது.

யுனிசெப் பரிந்துரை: குழந்தைகளை வெப்ப பாதிப்பில் இருந்து பாதுகாக்க வீடுகளிலும், பள்ளிகளிலும் அவர்கள் விளையாட நிழல் நிறைந்த குளிர்ச்சியான இடங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற யுனிசெப் அறிவுறுத்துகிறது. பெற்றோர்கள் குழந்தைகள் தளர்வான ஆடைகள் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு வெப்ப அலை பாதிப்பால் உடல்நலம் குன்றினால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.