சென்னை: இரண்டாம் உலகப்போர் காலத்தில், தாய்லாந்து- பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணியின்போது இறந்த தமிழர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள ‘நடுகல்’ திறப்பு விழாவுக்கு வரும்படி தாய்லாந்து தமிழ்ச்சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 1939-ம் ஆண்டு முதல்1945-ம் ஆண்டு வரை இரண்டாம்உலகப் போர் நடைபெற்றது. அப்போது, ஜப்பானிய ராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் மற்றும் மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளிலிருந்து கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்ட வர்களில், தாய்லாந்தை பர்மாவுடன் இணைக்கும் ரயில் பாதை கட்டுமானப் பணிகளில் 1.50 லட்சம் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்பணியின்போது, வேலைச்சுமை, உணவு கிடைக்காதது, நோய்முதலியவற்றால் 70 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளனர். இந்நிலையில், தாய்லாந்தின் காஞ்சனபுரியில் உள்ள தாவாவோர்ன் என்ற புத்தர் கோயில் வளாகத்தில், இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டது. இந்த இடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதைக்கப்பட்டவர்கள், தமிழர்கள் என்பது அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் டிஎன்ஏ ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்ச் சமுதாய மரபுப்படி ‘நடுகல்’ அமைக்க தாய்லாந்து நாட்டுதமிழ்ச் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அயலக தமிழர் நலத்துறை சார்பில் கடந்த ஜன.12-ம்தேதி சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில், அயல்நாடுகளில் இருந்து வந்த தமிழர்களை பாராட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
அப்போது தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, 2-ம் உலகப் போரின்போது, உயிர்நீத்த தமிழர்களுக்கு ‘நடுகல்’ அமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதையடுத்து, தற்போது தாய்லாந்தில் இருந்து வந்துள்ள அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத் தலைவர் ரமணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தரகுமார், செய்தி தொடர்பாளர் மகேந்திரன் ஆகியோர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து, நடுகல்அமைக்க நிதியுதவி வழங்கியதற் காக நன்றி தெரிவித்தனர். அத்துடன், அயலகத் தமிழர் நலத்துறை அமைத்ததற்காகவும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். சந்திப்பின்போது, தாய்லாந்து காஞ்சனபுரியில் மே 1-ம் தேதி நடைபெற உள்ள ‘நடுகல்’ திறப்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர்.