நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது: சசிதரூர் விமர்சனம்

திருவனந்தபுரம்,

முன்னாள் மத்திய மந்திரியும் எம்.பியுமான சசிதரூர், நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் 4-வது தடவையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் சிறப்பான வெற்றியை பெறுவோம், கால் பதிப்போம் என்று பா.ஜனதா சொல்கிறது.சந்தேகமே இல்லாமல், தென்னிந்தியாவில் கால் பதிக்க பா.ஜனதா முயற்சிக்கும். பிரதமர் மோடியின் பிரசாரம் அதைத்தான் உணர்த்துகிறது.

எனினும், தென்னிந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதாக சொல்லும் பா.ஜனதாவை உண்மையிலேயே வளர்ச்சி அடைந்துள்ள தென் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது. கேரளாவுக்கு குறிப்பிட்டு சொல்லும்படி பா.ஜனதா எதுவும் செய்யவில்லை. கேரளாவுக்கு எய்ம்ஸ் தருவதாக சொன்னார்கள். ஆனால் எய்ம்ஸ் வரவில்லை.

வடக்கு-தெற்கு பிரிவினை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் பா.ஜனதா சொல்கிறது. ஆனால், மதம், மொழி, பிராந்திய அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பது பா.ஜனதாதான்.வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் முக்கிய பிரச்சினைகள் என்று மக்களுக்கு தெரியும். மதத்தின் அடிப்படையில் அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.