நான் இதை நினைச்சுக்கூட பார்க்கல, கதறும் டூபிளெசிஸ்! ஆர்சிபி ரசிகர்கள் சோகம்

ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனும் இதுவரை மோசமாகவே அமைந்திருக்கிறது. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதனால் அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸ் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியிலும் அந்த அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. பேட்டிங் சிறப்பாக இருந்தால், பவுலிங் சிறப்பாக இருப்பதில்லை, பவுலிங் சிறப்பாக இருந்தால் பேட்டிங் சிறப்பாக இருப்பதில்லை என்பது தான் ஆர்சிபி அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இது குறித்து அந்த அணியின் கேப்டன் டூபிளெசிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

RCB கேப்டன் டூபிளெசிஸ் வருத்தம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார். தோல்விக்குப் பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் கூறுகையில், ‘இந்த தோல்வியை ஜீரணிப்பது மிகவும் கடினம். மைதானம் மிகவும் ஈரமாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்ததாக நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாக விளையாடி எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். போட்டியின் போது, ​​குறிப்பாக பவர்பிளேயின் போது நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம்.

பனி பிரச்சனையால் தோல்வி

ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், ‘பனி ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் 250 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் 196 ரன்கள் எடுத்தனர். பனி வரும்போது, ​​நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். பந்து மிகவும் ஈரமாக இருந்தது, அதனால் பந்துவீச்சாளர்கள் போராட வேண்டியிருந்தது. நாங்களும் சில முக்கியமான வாய்ப்புகளை தவறவிட்டோம், படிதாரும் நானும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் போது நாங்கள் நன்றாக நகர்ந்தோம். ஆனால் அதன்பிறகு சரியாக அமையவில்லை.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் பாராட்டிய ஃபாஃப் டு பிளெசிஸ், ‘ஒவ்வொரு முறையும் ஜஸ்பிரித் பும்ரா கையில் பந்தைப் பார்க்கும்போது, ​​​​அவரை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும் என பேட்ஸ்மேனாக நினைப்பதுண்டு. ஆனால் அவரிடம் திறமை அதிகம். அவர் அழுத்தத்தின் கீழ் நன்றாக பந்து வீசுகிறார். பேட்ஸ்மேன்களிடம் காண்டப்படும் அதே அதிரடியுடன் பந்துவீசுகிறார். ஒவ்வொரு பந்தில் ஒவ்வொரு விதமாக வீசுகிறார். லசித் மலிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் பும்ரா இன்னும் சிறப்பாக பந்துவீசுகிறார் என நினைக்கிறேன்.

பேட்டிங் இன்னும் சிறப்பாக வேண்டும்

பேட்டிங் குறித்து ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், ‘ பும்ரா எங்கள் அணியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆர்சிபி அணி பேட்டிங் மூலம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆர்சிபி பந்துவீச்சு எங்கள் வலிமையான பக்கமல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பேட்டிங்கில் செம ஸ்டிராங். அது இன்னும் வெளிப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. இந்த சீசனில் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். வரும் போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் 2024 சீசனில் டாப் 4 இடத்தை பிடிப்போம்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.