ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
இதையடுத்து 3-வது வெற்றியை சுவைத்த பிறகு குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், “கடைசி 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்று கொண்டு வந்து விட்டால் இலக்கை நிச்சயம் எட்டி விடலாம் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. களத்தில் இருப்பவர்களில் யாராவது ஒரு பேட்ஸ்மேன் ஆக்ரோஷமாக விளையாடினால், 2-3 பந்து மீதம் இருக்கும் போதே வெற்றி பெற முடியும்.
நான் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள் அவுட் ஆகி விட்டேன். ரஷித் கானும், ராகுல் திவேதியாவும் போட்டியை முடித்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி பந்தில் ஆட்டத்தை வெல்வது ஒரு அற்புதமான உணர்வு. ரஷித்கான் தரமான வீரர். அவரை போன்ற வீரர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்” என்று தெரிவித்தார்.