புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்றிரவு (வியாழன்) இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.
நேற்றிரவு நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலவக்கூடிய வெப்பநிலை பற்றி பிரதமருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய இந்தியாவுக்கான கணிப்புகள் பற்றி விவரிக்கப்பட்டது. தொடர்ந்து கடும் வெப்ப அலையால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளை சமாளிக்க சுகாதாரத் துறையின் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், வெப்ப அலை தாக்கத்தை சமாளிக்க மத்திய – மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், நோயாளிகளுக்கு செலுத்தக் கூடிய குளுகோஸ் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தினார். அதேபோல், வெப்ப காலத்தில் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் விநியோகம் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், வெப்ப அலை தொடப்ராக பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வெப்ப தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய முன்னேற்பாடுகள் உரிய வகையில் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும், காட்டுத் தீ பரவாமல் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை காட்டுத் தீ ஏற்பட்டால் தாமதிக்காமல் அதனை உடனடியாக அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முழு ஆயத்தமாக இருக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளார், உள்துறை செயலாளர், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடுமையான வெப்ப அலையால் குஜராத், மகாராஷ்டிராவின் மத்திய பகுதிகள், வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், வடக்கு சத்தீஸ்கர், ஒடிசா, ஆதிரப் பிரதேசம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படக் கூடும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கடந்த வாரம் அளித்த ஊடகப் பேட்டியில், “நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகளில் சராசரி அளவை விட வெப்பம் அதிகரிக்கும்.
சமவெளிப் பகுதிகளில் அதிக அனல்காற்று வீசும். இதன் காரணமாக குஜராத், மத்திய மஹாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.