புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் இருந்த மும்பையும் பெங்களூருவும் நேற்று மோதியிருந்தன. தோற்கிற அணியின் நிலை மேலும் பரிதாபமாகும் என்பதால் இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக இது இருந்தது. ஆனால், வழக்கம்போல ஆர்சிபி நிலைமையின் தீவிரத்தை புரியாமல் இந்தப் போட்டியிலும் சொதப்பி தோற்றிருக்கிறது.
டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அந்த தருணத்திலேயே போட்டியைப் பாதி வென்று விட்டது என்றே சொல்லலாம், வான்கடே மைதானம் பொதுவாக சேஸிங்கிற்கு ஆதரவான மைதானம், இரவு ஈரப்பதத்தின் காரணமாக பௌலர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்கு எளிதான பந்துகள் வந்து சேரும். ஆகமொத்தம் ஆர்சிபி பௌலிங் இருக்கும் நிலைமைக்கு எத்தனை ரன்கள் அடித்தாலும் மும்பை சேஸ் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் நினைத்தபடியே மும்பை எளிதாக சேஸ் செய்து விட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ், லாம்ரோர், வைசாக் என அனைவரையும் உள்ளே எடுத்து ஆர்சிபி சரியான அணியை இறுதியாக எடுத்துள்ளது என ஆறுதல்பட்டு கொள்ள முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியோ ஆர்சிபி பேட்ஸ்மேன்களின் லெக் ஸ்பின் வீக்னஸையும் ஸ்ரேயாஸ் கோபால் பந்துக்கு அவர்கள் திணறுவார்கள் என்பதையும் அறிந்து ப்யூஸ் சாவ்லாவுக்கு பதிலாக அவரை உள்ளே கொண்டு வந்திருந்தது.
முதல் பேட்டிங் ஆட ஆர்சிபியின் கோலியும், டு ப்ளஸ்ஸிஸும் ஆட்டத்தைத் தொடங்க ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரஞ்ச் கேப் ஹோல்டர் விராட் கோலியை பும்ரா பெவலியனுக்கு அனுப்ப அடுத்து வந்த அதிரடி ஹிட்டர் வில் ஜேக்ஸும் பெரிதாக ஜொலிக்காமல் 8 ரன்களில் நடையைக் கட்ட 23/2 என ஆர்சிபிக்கு அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது .
அதன்பின் வந்த ராஜத் பட்டிதரும் , டு ப்ளஸ்ஸிஸும் மெல்ல மெல்ல அணியை மீட்டுத் தரும் முயற்சியில் இறங்க 11-வது ஓவரில் 100 ரன்கள் எடுக்கப்பட்டது. ராஜத் பட்டிதர் அரைசதம் அடித்த நிலையில் கோட்ஸி பந்தில் ஆட்டமிழக்க எல்லா போட்டியிலும் தொடர்ந்து சொதப்பும் மேக்ஸ்வெல் இந்தப் போட்டியிலாவது நன்றாக ஆடி ஆர்சிபியை கரை சேர்ப்பார் என்று எதிர்பார்த்தால் டக் அவுட் ஆகி மற்றொரு முறை ஏமாற்றம் அளித்தார்.
கடந்த சீசன் முழுவதும் தினேஷ் கார்த்திக் சரியாக ஆடாமல் வெளியே போனார் என்றால் இந்த சீசனில் அந்த வேலையை மேக்ஸ்வெல் பார்த்துக் கொண்டிருக்கிறார். 6 போட்டிகளில் ஆடி பேட்டிங்கில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஆர்சிபிக்கு உள்ளே இருந்து கொண்டே மிகப்பெரிய பின்னடைவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மேக்ஸ்வெல்.
டி20 ஃபார்மெட்டில் பும்ரா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பௌலர் என்பதை இந்தப் போட்டியிலும் நிரூபித்து விட்டார். முதலில் கோலியை ஆட்டமிழக்க வைத்தவர், அடுத்து நன்றாக ஆடிகொண்டிருந்த டு ப்ளஸ்ஸிஸை காலி செய்ததோடு, இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஆர்சிபிக்கு ஏற்படுத்திய லாம்ரோரை முதல் பந்திலேயே காலி செய்து ஆர்சிபியின் ரன்குவிப்பை மொத்தமாகக் கட்டுப்படுத்தி விட்டார்.
விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்ததால் இம்பேக்ட் சப்ஸ்ட்யூட்டாக இன்னொரு பேட்ஸ்மேன் சௌரவ் செளகானை களம் இறக்கியது ஆர்சிபி. இருந்தும் எந்தவித பலனும் அளிக்கவில்லை, இறுதிக் கட்டத்தில் தனி ஆளாக நின்று ஆடி தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்களைக் குவிக்க ஆர்சிபி 196 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
பேட்டிங்கில் ஒருபுறம் ஆர்சிபி ஸ்டார் பேட்ஸ்மேன்கள் சோதித்தார்கள் என்றால் மறுபுறம் அம்பயர்களோ அடுத்தடுத்து தவறான முடிவுகளைக் கொடுத்து அதிர்ச்சியளித்தனர்.
பவுண்டரி லைனில் ஃபீல்டர் பந்தை தடுக்கும்போது பவுண்டரி லைனை தட்டியபோதும் கூட அதை கவனிக்காமல் விட்டது, வொய்டாக வீசிய பந்தை வொய்ட் கொடுக்காமல் விட்டது, இரண்டு ரிவ்யூக்களும் முடிந்த நிலையிலும்கூட 3-வது அம்பயருக்கு முடிவை ரெஃபர் செய்தது, தினேஷ் கார்த்திக்குக்கு இறுதி ஓவரில் ஒவர் ஃபுல் டாஸ் பந்தை நோ பால் கொடுக்காமல் விட்டது இதையெல்லாம் விட நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பந்து வீசியும் இறுதி ஓவர்களில் 5 ஃபீல்டரில் ஒரு ஃபீல்டரை சர்க்கிளுக்கு உள்ளே நிறுத்தும் விதியை மறந்தது என அடுக்கடுக்காக தப்பினை செய்து அம்பயர்கள் அதிர்ச்சி அளித்தனர்.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் ஆடும் போட்டிகளில் அம்பயர் 12-வது வீரராக மும்பைக்கு செயல்படுவார் என்ற சோசியல் மீடியா குற்றச்சாட்டுகள் இந்த தவறான முடிவுகளினால் மீண்டும் நேற்று டிரெண்ட் ஆகத் தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் சேஸிங் இலக்கோ 197 ரன்கள் அதை டிஃபெண்ட் செய்ய எந்தவித திட்டமும் இல்லாமல் ஆர்சிபி பௌலிங் செய்ய வர இஷான் கிஷனும் ரோஹித்தும் பவர்பிளேவில் இருபுறமும் பற்ற வைக்கப்பட்ட பட்டாசாக வெடித்து ஆர்சிபியை நோகடித்து விட்டனர். குறிப்பாக இஷான் கிஷன் சிக்ஸர் மழைகளால் ஆர்சிபி பௌலர்களை வதம் செய்து கொண்டிருந்தார்.
பவர்பிளே 6 ஓவரில் 72 ரன்கள் அடித்து போட்டியை ஆர்சிபி பக்கம் இருந்து மொத்தமாக இழுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டு கொண்டனர். அதோடு நிறுத்தாமல் ரன்ரேட்டில் மிகவும் பின் தங்கியிருந்த மும்பை இந்தியன்ஸ் குறைந்த ஓவர்களில் அதிவிரைவாக சேஸ் செய்து இலக்கை எட்டி அதன் மூலமாக ரன்ரேட்டைக் கூட்ட வேண்டும் என்ற முயற்சியைக் கையில் எடுத்தது.
பவர்பிளே தாண்டியும் எங்கேயும் அதிரடி என்கிற காரத்தைக் குறைக்கவில்லை 9-வது ஓவரில் 100 ரன்களைத் தொட்டது, இஷான் கிஷன் ஆட்டமிழக்க உள்ளே வந்து சூர்யகுமார் இரக்கமே இல்லாமல் ஆர்சிபியை அலறவிட்டார். போடும் பந்துகள் எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறக்க 17-வது பந்தில் தனது அரைசதத்தை பதிவு செய்து தனது டி20 மறு எண்ட்ரியை மிகவும் பிரம்மாண்டமாக அறிவித்துள்ளார்.
ரோஹித், சூர்யா தங்களது விக்கெட்டை ஒருகட்டத்தில் விட்டாலும் மும்பையை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. பாண்டியா, திலக் வர்மா துணையுடன் 16-வது ஓவரிலேயே போட்டியை முடித்து தங்களது ரன்ரேட்டை ஏற்றிக் கொண்டு இரண்டு புள்ளிகளையும் பெற்று 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
ஆர்சிபியோ இந்த சீசனில் 5-வது தோல்வியைப் பெற்று தங்களது சீசனை சீக்கிரமே முடித்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. அவர்களிடம் பௌலிங் இல்லவே இல்லை அதை கவனத்தில் கொண்டு தற்காத்து ஆடும் வகையில் மேக்ஸ்வெல் போன்ற பேட்ஸ்மேன்களும் ஃபார்மில் இல்லை. இந்த வருடமும் ஈ சாலா கப் நம்து என்கிற கோஷம் போடமுடியாமல் மற்றொரு வருடத்திற்கு அதைத் தள்ளிப் போடும் முயற்சியில்தான் ஆர்சிபியின் செயல்பாடு உள்ளது.
முதல் 3 போட்டிகளில் தோற்றிருந்தாலும் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள எல்கிளாசிகோ போட்டியான சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு மிகுந்த நம்பிக்கையோடு நன்றாகவே தயாராகியுள்ளது மும்பை.
ஆர்.சி.பி நேற்றைய போட்டியில் தோல்வியடைய என்ன காரணமென நீங்கள் நினைக்கிறீர்கள்!