புதுடெல்லி: இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை வழங்கி உள்ளது.
இந்திய விமானப் படையில் மிக் 21, மிக் 23, மிக் 27 ரகங்களை சேர்ந்த பழைய போர் விமானங்களுக்குப் பதிலாக புதிய போர் விமானங்களை சேர்க்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவுசெய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸிடம் (எச்ஏஎல்) இருந்து 97 தேஜஸ் எம்.கே.1 ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய விமானப் படையில் தேஜஸ் மார்க் 1 ரக விமானம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடர்ந்து தேஜஸ் எம்.கே.1 ரக விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப் பட உள்ளன. இந்த போர் விமானங்களில் டிஜிட்டல் ரேடார், வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், ஜாமர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள், ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் சோதனை ஓட்டம் அண் மையில் பெங்களூருவில் வெற்றி கரமாக நடத்தப்பட்டது.
இதுகுறித்து விமானப் படை வட்டாரங்கள் கூறும்போது, “விமானப்படையில் பழைய போர் விமானங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. விமானப் படையில் தற்போது 30 தேஜஸ் ரக விமானங்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டில் 83 தேஜஸ் எம்.கே. 1 ரக விமானங்களை வாங்கஎச்ஏஎல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது புதிதாக 97 தேஜஸ் ரக விமானங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படு கிறது. அடுத்த 4 ஆண்டுகளில் புதிய போர் விமானங்கள் படையில்சேர்க்கப்படும். அப்போது படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தன.