“எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்?” – பாஜக மீது பிரியங்கா காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: “கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் பாஜக குற்றம்சாட்டும்?” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தராகண்ட்டின் நைனிடாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தவர்கள், இப்போது 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது, இன்னும் அதிக பெரும்பான்மையை எதிர்பார்க்கிறார்கள்.

பாஜக தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தது? 75 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தராகண்ட் எப்படி இவ்வளவு திறமையுடன் வளர்ந்திருக்கிறது? ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் எங்கிருந்து வந்தது? இதற்கு யார் காரணம்? 1950-களில் பண்டிட் ஜவஹர்லால் நேரு முன்முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் சந்திரயான் வெற்றிக்கான விதைகள் சாத்தியமா?

காஸ் சிலிண்டர் விலையைக் குறைத்திருப்பதாக இப்போது சொல்கிறார்கள். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக காஸ் சிலிண்டருக்கு ரூ.1,200 கொடுக்கவில்லையா? அப்போதெல்லாம் நாட்டை ஆண்டது யார்… பாஜகவும், பிரதமர் மோடியும்தானே?

இன்றைய உண்மையான பிரச்சினை பணவீக்கம், வேலையின்மை, ஊழல் ஆகியவைதான். பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் என்ன கூறுகிறாரோ அதுவல்ல.

பிரதமர் மோடி சமீபத்தில் ரிஷிகேஷில் ஆற்றிய உரையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன கூறினாரோ அதையேதான் கூறினார். அவருடைய பேச்சைக் கேட்டு நான் குழப்பமும் ஆச்சரியமும் அடைந்தேன். அவருடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் எவ்வளவு காலம்தான் துன்பப்படுவார்கள்?

பிரதமர் மோடி தனது ஒவ்வொரு பேச்சிலும் உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தை ‘தேவ பூமி’ என்று அழைக்கிறார். ஹிமாச்சலப் பிரதேசம் கடந்த ஆண்டு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டபோது, அந்த தேவ பூமியை அவர் புறக்கணித்தார். நிவாரணத்துக்கோ, மறுசீரமைப்பு பணிகளுக்கோ அவர் எந்த நிதியையும் வழங்கவில்லை” என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.