கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்… பஞ்சாப் மீண்டும் தோல்வி – டாப்பில் RR!

RR vs PBKS Match Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சண்டிகரின் முல்லான்பூர் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவாண் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. துணை கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டு வந்தாலும், சாம் கரன் கேப்டன்ஸி பொறுப்பை இன்று ஏற்றுக்கொண்டார். சிக்கந்தர் ராஸாவிற்கு பதில் லிவிங்ஸ்டன் இன்று இடம்பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் மற்றும் அஸ்வின் இன்று விளையாடவில்லை. அவர்களுக்கு பதில் தனுஷ் கோட்டியான் மற்றும் ரோவ்மான் பாவெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

மிடில் ஓவர்களில் மோசம்

பஞ்சாப் அணிக்கு இன்று தொடக்கம் சரியாக அமையவில்லை. 3.4 ஓவர்களில் 27 ரன்களை எடுத்திருந்த பஞ்சாப் அணியில் அதர்வா டைடே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், பேர்ஸ்டோவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் பவர்பிளேவில் நிதானமாகவே விளையாடினர். 6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்தது. பவர்பிளே முடிந்து ஸ்பின்னர்கள் வந்தது விக்கெட்டுகள் வரிசையாக விழ தொடங்கியது. பிரப்சிம்ரன் 10, பேர்ஸ்டோவ் 15, சாம் கரன் 6, ஷஷாங்க் சிங் 9 என சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அஷுடோஷ் சிங் அசத்தல்

ஜித்தேஷ் சர்மா 29 ரன்கள், லிவிங்ஸ்டன் 21 ரன்கள் என ஆறுதல் அளித்தாலும் கடைசி ஓவர்களில் அஷுடோஷ் சிங் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 31 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும் அவரும் கடைசி பந்தில் ஆடட்மிழக்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. ஆவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட், குல்தீப் சென், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

148 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியான் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் ராஜஸ்தானின் நல்ல தொடக்கம் இதுதான்.  8.2 ஓவர்களில் 56 ரன்களை எடுத்திருந்தபோது கோட்டியான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டாப்பில் ராஜஸ்தான்

ஜெய்ஸ்வால் 39, சஞ்சு 18, ரியான் பராக் 23, ஜூரேல் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ரோவ்மான் பாவெல் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் மகராஜ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசி, முதல் இரண்டு பந்துகளை டாட் பந்தாக்கினார்.

Arshdeep Singh to Shimron Hetmyer…..

Follow the Match https://t.co/OBQBB75GgU#TATAIPL | #PBKSvRR pic.twitter.com/Rp6yFW7mig

— IndianPremierLeague (@IPL) April 13, 2024

அடுத்த பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு ஹெட்மயர் அதிரடி காட்ட, நான்காவது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. 2 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில், 5வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி உறுதி செய்தார் ஹெட்மயர். ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ரபாடா, சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வானார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.