மதுரை: தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மதுரையில் இன்று (ஏப்.13 )முனிச்சாலை ஓபுளாபடித்துறையில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: ”கீழடி அகழாய்வு மூலம் வைகை நாகரிகம் சங்ககாலத்திற்கு முந்தைய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைகை நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. அத்தகைய அகழாய்வு தற்போதைய தத்துவார்த்த போராட்டத்திற்கு உந்து சக்தியாக உள்ளது. மனித நாகரிகம், மத நாகரிகம்தான் எனவும், அவ்வாறு கோலோச்சியதாக நிறுவதற்கு பாஜகவினர் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மூலம் மதச்சார்பற்ற குடியரசுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனை காப்பாற்றுவதற்காக நாம் இணைந்துள்ளோம்.
வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. மதச்சார்பற்ற இந்தியா, ஜனநாயகம், ஊடகம், சமூக நீதி ஆகியவற்றுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த சூழலில் பாஜக ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படாவிட்டால் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாவோம். மிகப்பெரிய இக்கட்டான சூழலில் உள்ளோம்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மதவெறியை பின்பற்றக்கூடிய நிலை உளளது. அங்கு சிறுபான்மை மக்களை குறித்து தாக்குதல் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினரின் சொத்துக்களையும் அவர்களது மற்ற அம்சங்களையும் குறிவைத்து தகர்த்து அழிக்கக்கூடிய நிலையில் பாஜக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.
சிறுபான்மையினர் மீது மோசமான வெறுப்பை குரூர தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை சிறையில் அடைக்கும் மோசமான அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். எதிர்க்கும் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் சிறையில் அடைக்கின்றனர்.
பாஜக அரசு பொருளாதார இறையாண்மையை ஒட்டுமொத்தமாக சூறையாடிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள், கனிமங்கள் என இந்தியாவின் சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது. பெரும் நிறுவனங்களுக்கு பாஜக அரசு 12.5 லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் வாங்கிய 20 ஆயிரத்தை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
ஊழலை சட்டப்பூர்வாக்கிய கட்சி பாஜக. பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தள்ளோம். எதிர்க்கட்சித்தலைவர்கள் ஊழல் செய்துள்ளனர் என்று அமலாக்கத்துறை மூலம் சோதனையிடுகின்றனர். அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள். இன்று மோடி தமிழகத்திற்கு ஊழலை ஒழிப்பேன் என்று வந்திருக்கிறார்.
அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மோடியின் உத்தரவாதம் என்கின்றனர். ஊழல் செய்தவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அரிச்சந்திரனாகி விடுகிறார்கள். இதனை நாம் வெளிப்படுத்தும்போது அவர்கள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார்கள். நடத்தினால்தான் யாருக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை அறியமுடியும். தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு பெற முடியும். இப்படி பாஜக ஆட்சியில் நான்கு அடிப்படை தூண்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
வடமாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி முகம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு மீண்டு்ம் மீண்டும் வந்து கொண்டிருக்கிறார் மோடி. தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கும். தமிழக மக்களின் மகத்தான தீர்ப்பு தேசத்திற்கு வழி்காட்டக்கூடியதாக இருக்கும். பாஜக கூட்டணிக்கு இடம் இல்லை என தமிழகம் வழிகாட்ட வேண்டும்” இவ்வாறு சீதாராம் யெச்சூரி பேசினார்.