பிளாஷ்பேக் : தன் வாழ்க்கையை ஒரேநாளில் வாழ்ந்து காட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
தமிழ் சினிமாவின் 'பாட்டுக் கோட்டை' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தமிழ் சினிமாவை வார்த்தைகளால் கட்டிப்போட்ட இளைஞர். எனக்கு மட்டும் பாட்டு எழுதுங்கள் உங்களை நான் ராஜாவாக்குகிறேன் என்று எம்ஜிஆரால் அழைக்கப்பட்டவர், ஆனால் அதை மறுத்து 19 இசை அமைப்பாளர்களுக்கு பாட்டு எழுதியவர்.
ஒரு முறை அவரை சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன். அதை எனக்கு சொல்வீர்களா என்று கேட்டார். அதற்கு கவிஞர் “வாருங்கள் இன்றைக்கே அதை சொல்கிறேன்” என்று கூறி, அந்த பத்திரிகையாளரை தனது வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்து சென்றார். பிறகு, சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் அவரை அழைத்துச் சென்றார். அதன் பிறகு பஸ்சில் அழைத்துச் சென்றார். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்.
அதுவரை பட்டுக்கோட்டையார் அந்த நிருபரிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அந்த நிருபர் வாழ்க்கை வரலாறை பற்றி எதுவும் கூறவில்லையே என்றார். அதற்கு அவர் தன் கூட பயணித்த நிருபரிடம் ''முதலில் நடையாய் நடந்தேன். பிறகு, ரிக்ஷாவில் போனேன்; அதன் பிறகு, பஸ்ஸில் போக நேர்ந்தது, இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?” என்று சிரித்துக் கொண்டே தன் வாழ்க்கையைச் சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் .
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 94வது பிறந்தநாள் இன்று. திரையுலகில் 6 ஆண்டுகளில் 17 படங்களில் 187 பாடல்கள் எழுதியவர். எல்லா பாடல்களும் பொதுவுடமை தத்துவம் பேசிய பாடல்கள்.