Romeo Review: பீல்குட் பார்முலா ஓகே; அந்த அதீத டிராமாதான்… ரசிக்க வைக்கிறானா இந்த ரோமியோ?

இளம்வயதில் மலேசியாவிற்குச் சென்று வேலை பார்த்து தென்காசியில் இருக்கும் தனது குடும்பத்தின் சுமையைத் தீர்க்கும் அறிவு (விஜய் ஆண்டனி) அவரது 35வது வயதில் ஊருக்குத் திரும்ப வருகிறார். அவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தார்கள் முயற்சி செய்யும் போது, ‘வயதாகி விட்டாலும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என அடம்பிடிக்கிறார். இந்தச் சமயத்தில், அப்பாவிடம் சென்னையில் ஐடியில் வேலை பார்ப்பதாகச் சொல்லிவிட்டு, சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் 25 வயதான லீலா (மிருணாளினி ரவி). இவரும் தனது தாத்தாவின் இறப்பிற்காக ஊருக்கு வருகிறார். அங்கு லீலாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் அறிவு. ஸ்ட்ரிக்ட் தந்தையிடமிருந்து தப்பிக்க, அறிவை திருமணம் செய்துகொள்வதே தீர்வு என நண்பர்கள் அறிவுரை கூற கரம்பிடிக்க சம்மதிக்கிறார் லீலா. இதற்குப் பின் நடக்கும் களேபரங்கள்தான் ‘ரோமியோ’.

Romeo Review

கணவன் மீது விருப்பம் இல்லாத மனைவி, விழுந்து விழுந்து காதலைப் பொழியும் கணவன்… இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்ற சிம்பிளான ரொமான்டிக் படங்களின் டெம்ப்ளேட் ஒன்லைன்தான். (மௌன ராகம், Rab Ne Bana Di Jodi எனச் சில படங்களின் நினைவுகளும் வந்துபோகின்றன.) அதை வைத்து ஜாலியான காதல் கலந்த எமோஷனல் படம் ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்திருக்கிறார். ஒரு நல்ல பீல்குட் படத்திற்கான திரைமொழியைப் பல இடங்களில் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.

அறிவாக விஜய் ஆண்டனி பக்காவான தேர்வு. அதிர்ந்து பேசாத குரல், ஊக்கமளிக்கும் யதார்த்த வசனங்கள் என அவருக்காகவே எழுதியதைப் போலக் கச்சிதமாக அமைந்திருக்கிறது இந்தக் கதாபாத்திரம். குறையாகச் சொல்லப்படும் அவரது சில எக்ஸ்பிரஷன் இல்லாத ரியாக்‌ஷன்ஸ், இந்தக் கதையின் ஒரு எபிசோடில் ரொம்பவே கை கொடுத்திருக்கிறது. எமோஷனல் காட்சிகளிலும் சறுக்கல்கள் இன்றி கரையேறுகிறார்.

லீலாவாக மிருணாளினி ரவி, முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த ஏதுவான கதாபாத்திரம். குறையெதுவும் இல்லாமல் அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு வெள்ளித்திரையில் இதுதான் முதல் விசிட்டிங் கார்டு. பல வருடங்களாக சினிமா கனவைச் சுமக்கும் ஒரு பெண்ணின் வலி, ஏக்கம், கோபம் என அத்தனை உணர்வுகளையும் வசனங்கள் இல்லாமலேயே அழகாகக் கடத்துகிறார்.

Romeo Review

லீலாவின் நண்பர்களாக வரும் ஷா ரா அண்ட் கோவின் காமெடிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஶ்ரீஜா ரவி எனப் பல சீனியர் நடிகர்கள் தங்களுக்கான வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பும் சிறப்பு.

முதன்மை கதாபாத்திரங்களையும் அதன் குணாதிசயங்களையும் சுவாரஸ்யமாக எழுதிய விநாயக், திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். அதீத ட்ராமாவையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். விஜய் ஆண்டனி பேசும் மோட்டிவேஷன் வசனங்கள் நன்றாக இருந்தாலும், அதை விஜய் ஆண்டனி பேசுவதாலேயே கொஞ்சம் ஓவர் டோஸாகி விடுகிறது.

மலேசியாவில் வேலை பார்த்து வந்த விஜய் ஆண்டனி சென்னைக்கு வந்த பின்னர் என்ன வேலை பார்த்துக்கொண்டிருந்தார், காணாமல் போனதாகச் சொல்லப்படும் தங்கையை அவர் ஏன் தேடவே இல்லை எனப் பல லாஜிக் கேள்விகளும் துரத்திக்கொண்டே இருக்கின்றன.

அறிமுக இசையமைப்பாளர் பரத் தனசேகர், தனது பாடல்களாலும் பின்னணி இசையாலும் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக ‘யார் எழுதியதோ’, ‘செல்லக்கிளி’ போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. இருந்தாலும் அடுத்தடுத்து புதிதாகப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Romeo Review

ஹீரோ விஜய் ஆண்டனி நம்மை ரசிக்க வைத்தாலும், எடிட்டர் விஜய் ஆண்டனி நம்மைச் சோதிக்கிறார். திரைக்கதையில் இருக்கும் தொய்வைத் தனது எடிட்டிங்கில் ஈடுகட்டத் தவறியிருக்கிறார். 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை இன்னுமே குறைத்திருக்க முடியும். படம் கிளாஸாக தெரிய ஃபரூக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவும் ஒரு முக்கிய காரணம்.

படத்தில் தனது ஜூலியட்டைக் காதலிக்க வைக்க ரோமியோ போராடுவது போல், தொய்வான திரைக்கதையுடன் இந்த `ரோமியோ’வும் நம்மை ரசிக்க வைக்க ரொம்பவே போராடுகிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.