புதுடெல்லி: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டு பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்த மக்களவைத் தேர்தல் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பான அரசியலமைப்பைக் காப்பது மற்றும் பாதுக்காப்பதற்கானது என்றும் தெரிவித்துள்ளது.
அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாடு அசாதாரணமான பன்முகத்தன்மை கொண்ட டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தநிலையில் அவரின் மகத்தான பாரம்பாரியம் மற்றும் பங்களிப்பான இந்திய அரசியலமைப்பை அகற்றுவதற்கான அழைப்புகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. சந்தேகத்துக்கு இடமின்றி இதுவேறு யாருமில்லாமல் நமது பிரதமர் மோடியின் திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியேயாகும்.
இதற்கான உபாயம் மிகவும் எளிமையானது, ஆனால் முழுவதும் பாசாங்கு நிறைந்தது. அரசியல் அமைப்பை குறைத்து மதிப்பிடும் அதேவேளையில், அரசியலமைப்பின் மரபை நிலைநிறுத்தும் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டே அதனை மாற்றவேண்டும் என்று முரசறைந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே இந்த 2024 மக்களவைத் தேர்தலின் அடிப்படை ஒன்றுதான். டாக்டர் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அதன் மதிப்புகள் மற்றும் அதன் அடிப்படைகளை அப்படியே பாதுக்காப்பதே” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் லட்சக்கணக்கான மக்களுடன் பவுத்தம் தழுவிய மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கு சென்று அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார். கார்கே தனது எக்ஸ் பக்கத்தின் பதிவில், “பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று, இந்த புனிதமான தீக்ஷாபூமியில், இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் மீண்டும் உறுதியேற்றுள்ளோம். இந்திய அரசியல் அமைப்பை பாதுகாக்க நாடு முழுவதும் ஒன்றிணைய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பதிவுடன் நாக்பூரில் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இறுதி நோக்கம் அரசியல் அமைப்பின் அடிப்படைகளை மாற்றுவதுதான். அதனால் தான் அதன் தலைவர்கள் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் என்று கூறி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், “இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைகளை யாராலும் மாற்ற முடியாது என்று பிரதமர் மோடி தெளிவு படுத்துகிறார் என்றால் அப்படி பேசிய பாஜக தலைவர்களை அவர் ஏன் கட்சியை விட்டு வெளியேற்றவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, அம்பேத்கரே இப்போது வந்தாலும், அவரால் கூட இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைகளை மாற்ற முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.