வாஷிங்டன்,
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது அண்மையில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானிய முக்கிய தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.
எந்த நேரமும் ஈரான் – இஸ்ரேல் போர் வெடிக்கும் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவி வந்த நிலையில், முதல் கட்டமாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் மொத்தம் 200 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது:- இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் உதவியால் ஈரானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இரும்புக்கவச பாதுகாப்பை உறுதிப்படுத்த நெதன்யாகுவுடன் பேசினேன். தாக்குதல்களை உன்னிப்பாக கவனிக்கிறோம். மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார். மேலும், போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவசர ஆலோசனையையும் ஜோ பைடன் மேற்கொண்டுள்ளார்.