ஆத்தூர்: “முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. எனவேதான், எங்கு பார்த்தாலும், என்னைப்பற்றி அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசி வருகிறார். மேலும், அதிமுகவை திட்டமிட்டு விமர்சிப்பதை அவர் தொடர்ந்து வாடிக்கையாக கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினைப் போல ஓராயிரம் பேர் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.” என்று சேலம் ஆத்தூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டாா். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. எனவேதான், எங்கு பார்த்தாலும், என்னைப்பற்றி அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசி வருகிறார். மேலும், அதிமுகவை திட்டமிட்டு விமர்சிப்பதை அவர் தொடர்ந்து வாடிக்கையாக கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினைப் போல ஓராயிரம் பேர் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
அதிமுகவைப் பொறுத்தவரைக்கும், ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வு ஏற்றம் பெறுவதற்காக தொடங்கப்பட்ட கட்சி. இந்த கட்சியை அழிக்க சிலபேர் முற்படுகின்றனர். அவர்கள் இந்த தேர்தலில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிமுகவை யார் அழிக்க நினைத்தாலும், அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் நினைத்தவர்கள் எந்த நிலையில் இருக்கின்றனர், என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசியலுக்கு வந்து 5 ஆண்டுகள்கூட ஆகாத சிலர், அதிமுகவை அழித்து விடுவதாக பேசுகின்றனர். அவர்களைப் போல எத்தனையோ பேரை பார்த்த கட்சி அதிமுக. எனவே, அதிமுகவை அழிக்க இந்த பூமியில் யாரும் பிறக்கவில்லை. அதிமுகவை அழிக்க யார் நினைக்கிறார்களோ, அவர்கள் அழிந்து போவார்கள் என்பதுதான் வரலாறு.
அதிமுக என்றொரு கட்சி இருப்பதால்தான், தமிழகத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு நிறைய திட்டங்கள் கிடைத்திருக்கிறது. ஏழைகள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதற்காக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கின்றனர். அதனால்,அந்த இருபெரும் தலைவர்கள் மக்கள் மனதில் குடிகொண்டுள்ளனர். எனவே, எங்களை யாராலும் அசைக்க முடியாது” என்று அவர் பேசினார்.