KKR vs LSG: முதல் ஓவரிலேயே தோல்வியை உறுதி செய்த லக்னோ… வேகத்தால் பறிபோன போட்டி!

KKR vs LSG Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் (IPL 2024) 28ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் (KKR vs LSG) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

லக்னோ அணி (Lucknow Super Giants) முதலில் பேட்டிங்கை தொடங்கிய நிலையில், டி காக் இன்றும் சுமாரான தொடக்கமே கொடுத்தார். டி காக் 10 ரன்களில் ஆட்டமிழக்க, தீபக் ஹூடா 8 ரன்களில் பவர்பிளேயே ஆட்டமிழந்தார். 49 ரன்கள் பவர்பிளேவில் குவித்த லக்னோ அணிக்கு ராகுல் ஆறுதல் அளித்தார். அவர் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டாய்னிஸ் 10 ரன்களில் அடுத்து ஆட்டமிழந்தார். 

நரைன் மிரட்டல்

ஆயுஷ் பதோனியும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்ட ஓவர்களில் பூரன் சிறப்பாக விளையாடி நிலையில், அவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை லக்னோ எடுத்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வைபவ் ஆரோரா, நரைன், சக்ரவர்த்தி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். குறிப்பாக நரைன் 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை எடுத்து 17 ரன்கலை மட்டுமே கொடுத்தார், அதிலும் 7 பந்துகள் டாட் ஆகும்.

முதல் ஓவரிலேயே பெரும் பின்னடைவு

லக்னோ அணி பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் பயங்கரமாக தடுமாறியது எனலாம். முதல் ஓவரிலேயே 22 ரன்கள் குவிக்கப்பட்டது. அதில் 10 ரன்கள் உதிரிகள்தான். இளம் வேகப்பந்துவீச்சாளரான ஷாமார் ஜோசப்பை நம்பி லக்னோ அணி தொடக்க ஓவரை அளித்த நிலையில், பயங்கர அழுத்தம் காரணமாக அவர் சரியாக பந்துவீச இயலவில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அந்த முதல் ஓவரிலேயே லக்னோ அணி பாதி தோல்வியை உறுதி செய்துவிட்டது. 

பில் சால்ட் அதிரடி

முதல் ஓவரில் இருந்தே பல கேட்ச்கள் தவறவிடப்பட்ட லக்னோ அணி மீண்டு வருவது கடினமாகியது. இருப்பினும் பவர்பிளேவில் மோஷின் கான் சிறப்பாக பந்துவீசினார். அவர் சுனில் நரைன் மற்றும் ரகுவன்ஷி ஆகியோரை அவரின் அடுத்தடுத்த ஓவரிலேயே விக்கெட் எடுத்தாலும் கொல்கத்தா அணி (Kolkatta Knight Riders) தனது அதிரடியை அப்போது இருந்தே தொடங்கிவிட்டது, குறிப்பாக பில் சால்ட் படு பயங்கரமாக விளையாடினார். இதனால், பவர்பிளே முடிவில் கொல்கத்தா அணி 58 ரன்களை குவித்தது. 

Clipped off his hips in style!

Captain @ShreyasIyer15 using the pace of Shamar Joseph effectively

Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema#TATAIPL | #KKRvLSG | @KKRiders pic.twitter.com/6Xn4GqyrkI

— IndianPremierLeague (@IPL) April 14, 2024

ஆட்ட நாயகன் பில் சால்ட்

அதன் பின் லக்னோ அணியால் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை. ஷ்ரேயாஸ் ஐயரும், சால்டுடன் சேர்ந்து பவுண்டரிகளை குவிக்க தொடங்கினார். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரி மழையாகவே இருந்தது.  இதனால், 15.2 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பில் சால்ட் 47 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்தார். மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்களை குவித்திருந்தார். லக்னோ பந்துவீச்சில் மோஷின் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பில் சால்ட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கும் நிலையில், லக்னோ அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.