புதுடெல்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவில் சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாகவும், நீண்ட கால சராசரி 87 செ.மீ என்றளவிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காலத்தின் ஆரம்பப் பகுதியில் எல் நினோ காலநிலை நிகழ்வு வலுவிழக்கும், அதேவேளையில் ஏற்கெனவே பலமிழந்திருந்த லா நினா காலநிலை நிலவரம் வளர்ச்சி பெரும்போது பருவமழைக்கு உதவியாக இருக்கும். இதனால் பருவமழை சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 22 எல் நினோ ஆண்டுகளில், பெரும்பாலானவற்றில் இந்தியாவில் சராசரி அல்லது அதற்கு அதிகமான அளவே பருவமழை பெய்துள்ளது. 1974 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் மட்டுமே இது பொய்த்து சராசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளது என்று ஐஎம்டி மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. இது தென் மேற்கு பருவமழையினுடன் நேரெதிர் தொடர்பைக் கொண்டுள்ளது. அதனால் சராசரிக்கு அதிகமான பருவமழை பொழிவுக்கு வாய்ப்புள்ளது என ஐஎம்டி விளக்கியுள்ளது.
’எல் நினோ’ , ‘லா நினா’ அறிவோம்: ’எல் நினோ தெற்கு அலைவு’ என்பது ஒருவகை காலநிலை நிகழ்வு. இந்நிகழ்வு சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு (2023) எல் நினோ ஆண்டாக அமைந்தது. பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் ‘எல் நினோ’. பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு இது.
இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும். பருவம் தப்பிய மழையும் கேடு, பருவம் தவறிய வெப்பமும் கேடு. இவை இரண்டுமே மக்கள் மீது பொருளாதாரம் மீது பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால்தான் இந்த காலநிலை நிகழ்வுகள் அதிகம் கவனம் பெறுகின்றன.
அதேவேளையில், பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த வெப்பநிலையால் வகைப்படுத்தப்படும் காலநிலை நிகழ்வு தான் லா நினா. வலுவான எல் நினோ ஆண்டான 2023-ஐ தொடர்ந்து 2024 இன் இரண்டாம் பாதியில் லா நினா வெளிப்படும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அண்மையில் கணித்திருந்தது. இதனால், இந்த முறை ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கு அதிக மழைப் பொழிவையும், அமெரிக்காவின் தானிய மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு வறண்ட வானிலையையும் கொண்டு லா நினா கொண்டு வரும் என்றும் அது கணிப்பை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் வசந்த காலத்தில் செய்யப்படும் வானிலை கணிப்புகள் அதிக நம்பகத்தன்மை கொண்டதில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், வலுவான எல் நினோ நிகழ்வுகளைப் பின்பற்றும் லா நினா பொதுவாகவே சராசரியை விட அதிகமான மழைப் பொழிவையே கொண்டு வந்த வரலாற்றுத் தரவுகள் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டி இருந்தது. லா நினாவின் தாக்கம் இந்தியப் பருவமழைக்கு நன்மை பயக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்திய வானிலை ஆய்வு மையமும் 2024ல் இந்தியாவில் சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும் என்றும் லா நினா அதற்கு உதவும் என்றும் கணித்துள்ளது. >> மேலும் வாசிக்க: காலநிலை மாற்றம் ஏன் தேர்தல் பிரச்சினை ஆகவில்லை?