இந்த உலகம் இன்னொரு போரை தாங்காது: ஈரான் – இஸ்ரேல் மோதலால் ஐ.நா. கவலை

ஜெனீவா: “மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (ஞாயிறு) காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஞாயிறு) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “அமைதியை நிலைநாட்ட வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அது பிராந்திய அமைதியாக இருக்கட்டும் அல்லது சர்வதேச அமைதி, பாதுகாப்பாக இருக்கட்டும். ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பு இப்போது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தத் தருணத்தில் மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது.

மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் விளிம்பில் நிற்கிறது. அந்தப் பிராந்திய மக்கள் முழு வீச்சு போரை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர். இத்தருணத்தில் உடனடியாக பதற்றத்தை தணிக்க வேண்டும். இது போரில் இருந்து விலகி நிற்பதற்கான தருணம். பழிக்குப் பழி என இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலைக் கண்டிக்கிறோம். வெறுப்புகளை முன்னெடுக்காமல் நிறுத்துங்கள்.

அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். எந்த ஒரு பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்துக்கும் அல்லது ஒரு நாட்டுக்கும் எதிராக பலத்தை பிரயோகிக்காதீர்கள். அதேபோல் இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்திவிட்டு எந்தவித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகள் விடுவிக்க வேண்டும். காசாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டு வர நமக்கு பொறுப்புள்ளது. அங்கு தடையில்லாது மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். மேற்கு கரை பதற்றத்தைத் தணிக்க வெண்டும். செங்கடலில் அச்சமற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

நாஸ்ட்ரடாம்ஸின் கணிப்புகள் பலிக்குமா? – இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். நேட்டோ, அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து ஒரு அணியிலும், ரஷ்யா, சீனா, ஏமன் மற்றும் வடகொரிய மற்றொரு அணியாகும் போரில் ஈடுபடலாம் என இணைய வாசிகள் கூறியுள்ளனர்.

16-ம் நூற்றாண்டு பிரெஞ்சு ஜோசியர் நாஸ்ட்ரடாம்ஸின் கணிப்புகள் மிகவும் பிரபலம். அவர் எழுதிய ‘தி பிராபசிஸ்’ என்ற புத்தகத்தில் 2024-ம் ஆண்டில் உலகம் மிகப் பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் களம் இறங்கியிருப்பதும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை பார்க்கும் போது, நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.