கடலூர்: “எனக்கு நம்பரை விட கொள்கை தான் முக்கியம். அதனால் முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்திருக்கிறேன்” என வேப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
இண்டியா கூட்டணியில் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவாக வேப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தேசிய அளவில் வியூகம் அமைத்து, எடப்பாடியையோ, அதிமுகவையோ எதிராகக் கருதாமல், தேசிய அளவில் பாஜகவை, மோடியை வீழ்த்தவேண்டும் என்ற முயற்சியில் 28 கட்சிகள் அடங்கிய கூட்டணி தான் இண்டியா கூட்டணி.
அந்தக் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. திமுக தலைமையிலான கூட்டணி அமைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்ட்டது.
எதிரணியில் 5 சீட் கிடைக்கும், திமுகவோடு இருந்தால் 2 தான் கிடைக்கும். எனவே அணி மாறுவார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை எனக்கு நம்பர் முக்கியமல்ல. நான் ஏற்றுகொண்டிருக்கிற கொள்கை தான் முக்கியம்.
அதனால் தான் அண்ணன் ஸ்டாலினோடு கைகோத்திருக்கிறேன். இன்று இருக்கும் சூழலில் அவர் பாஜகவோடு கைகோத்திருந்தால், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
செந்தில்பாலாஜி சிறையில் இருந்திருக்கமாட்டார். அண்ணன் பொன்முடி வழக்கும் திசைமாறியிருக்கும். ஆனால் பாஜக என்ன நெருக்கடி தந்தாலும் பாஜகவை தமிழ்நாட்டில் வளர விடமாட்டேன் என்ற உறுதியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். என்ன செய்தாலும் பாஜக மீண்டும் வெற்றி பெறக்கூடாது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறேன். அப்படியானால் கடலூர் தொகுதியில் விஷ்ணு பிரசாத்தும் வெற்றிபெறவேண்டும்.
இந்தத் தொகுதியில் பொறுப்பாளரான அமைச்சர் சி.வெ.கணேசன், எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர். அதனால் தான் அவர் அமைச்சர் பதவியோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வருகிறார்” என்றார்.