ஶ்ரீவில்லிபுத்தூர்: “சாதி கலவரத்தால் கெட்டுப்போன ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். சாதி, மத கலவரம் வராமல் இருப்பதற்கு திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம், தேரடி, மணிக்கூண்டு, இடையபொட்டல், கைகாட்டி கோயில் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “விலைவாசி உயர்வால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது மனைவியும் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்புகிறார். முன்பெல்லாம் எங்கள் வீட்டில் மதிய உணவுக்கு 3 காய் இருக்கும். தற்போது 2 காய் தான் இருக்கிறது. விலைவாசியை குறைக்க மோடி ஆட்சியை விட்டு போக வேண்டும்.
டெல்லியில் ராகுல் காந்தியும், தமிழகத்தில் உதய சூரியனும் வெற்றி பெற்றால் விலைவாசி குறையும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு கூடுதல் தாமிரபரணி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். எதிர்க்கட்சியினர் வேட்பாளர் பெயரை கூறாமல், சின்னத்தை கூறி வாக்கு கேட்கின்றனர். ஶ்ரீவில்லிபுத்தூர் சாதி கலவரத்தால் கெட்டுப்போன ஊர். நம்ம ஊரில் சாதி, மத கலவரம் வராமல் இருப்பதற்கு திமுக வேட்பாளர் ராணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
சிவகாசி சாலையில் உள்ள கைகாட்டி கோயில் பஜாரில் அமைச்சர் பிரச்சாரம் செய்தபோது, ‘நெசவாளர்கள் நூல் கிடைக்கவில்லை, 10 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லை’ என புகார் தெரிவித்தனர். அதற்கு நூல் பற்றாக்குறை என நீங்கள் கூறியவுடன், “இரு நாட்களில் அந்த பிரச்சினையை சரி செய்தேன். 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கூலி உயர்வு இல்லை, நம்ம ஆட்சியிலும் இரு ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டு நிச்சயம் கூலி உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு காடா துணி, சேலை நெசவு வேலை தொடர்ந்து வழங்கப்படும்” என்றார்