தோனி டெத் ஓவர்களில் மட்டும் மிக சிறப்பாக விளையாடுவது எப்படி என்ற ரகசியத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எம்எஸ் தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி நான்கு பந்துகளில் பேட்டிங் செய்ய வந்தார். முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர் அடித்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் அணிக்கு 26 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது.
தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது எப்படி?
ஹர்திக் பாண்டியா வீசிய 20வது ஓவரில் கடைசி நான்கு பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் கூறுகையில், ‘மும்பை இந்தியன்ஸ் எங்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் தோனியின் ஆட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் கிடைத்த 206 ரன்கள் மூலம் 206 ரன்களை எடுத்தோம். தோனி ஒவ்வொரு முறையும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். களத்திற்கு சென்று முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது எளிதல்ல.” என்று கூறினார்.
தோனியின் பிக் சீக்ரெட்
தொடர்ந்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் சிம்மன்ஸ் கூறுகையில், ஒரு பேட்ஸ்மேனாக, டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு திறமையை சோதிக்க தோனி பயிற்சி எடுப்பார். இதில் இரட்டை பலன்கள் இருக்கிறது. சிஎஸ்கேவின் டெத் ஓவர் பலத்தையும் அறிந்து கொள்ளலாம், தோனியும் பயிற்சி எடுத்துக் கொண்டதுபோல் இருக்கும். இதனால் வலைகளில் இப்போது அதிரடியாக ஆடுவார். அந்த பயிற்சி தான் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைகொடுத்தது என்றார்.
தோனி முழங்காலில் காயம்?
தோனி முழங்கால் காயத்துடன் போராடி வருவதாக சிம்மன்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் வலியை வெளிப்படுத்தவில்லை என கூறிய சிம்மன்ஸ், எல்லோருக்கும் தோனியை விட அவரது காயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றனர். ஏனென்றால் தோனி காயமடைந்து விளையாடமுடியாமல் போனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். அதனால் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். நான் சந்தித்த கடினமான மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் அனுபவிக்கும் வலியின் அளவு கூட எங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். இருப்பினும் தோனி முன்னோக்கி செல்வதில் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.