கேரள மாநிலம், ஆற்றிங்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டாக்கடை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதில் கொல்லம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர், ஆற்றிங்கல் தொகுதி வேட்பாளர் வி.முரளிதரன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “சொல்வதை செய்து காட்டும் அரசால் மட்டுமே கேரளாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்த விஷயத்தில் நம்மை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட இடது மற்றும் வலது முன்னணி கட்சிகளின் ஆட்சிகளை நம்ப முடியுமா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். இடது முன்னணி மற்றும் வலது முன்னணியின் பேச்சில் மட்டுமல்ல, அவர்களுடைய செயல்பாட்டிலும்கூட நமக்கு நம்பிக்கை இல்லை. அந்த தலைவர்களின் குணங்களிலும் நம்பிக்கை இல்லை என்பது நமக்கு தெரியும். இங்கு நம் முன்னிலையில் அவர்கள் மாறி மாறி எதிரிகளைப் போன்று சண்டை போடுவது போன்று நடிக்கிறார்கள். டெல்லிக்குச் சென்றால் அவர்கள் தங்களுக்குள் நட்பை வளர்க்கும் கூட்டங்களை நடத்துகிறார்கள். திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் திருநெல்வேலிக்கு சென்றால் அவர்கள் ஒன்றாக ஒரே கூட்டணியாக போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரிகளாக உள்ளனர். இரண்டு கட்சிகளும் அராஜகவாதிகளாக உள்ளனர். இரண்டு கூட்டணிகளும் ஊழல் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தொழில்துறையை தகர்த்தெறியும் சரித்திரம்தான் இரண்டு கட்சிகளுக்கு உள்ளன. இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை எல்லாம் அழித்தொழித்துவிட்டன. நம்முடைய கேரளமும் அத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கேரளாவை ஆளும் அரசு தங்கம் கடத்துபவர்களை பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை தினமும் எதிர்கொள்ளும் அரசாக உள்ளது. தங்கம் கடத்துபவர்களையும், குற்றம் செய்தவர்களையும் பாதுகாப்பதற்காக அரசும், நிர்வாகமும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. கேரளாவில் சி.பி.எம் நிர்வாகத்தில் உள்ள சுமார் 300 கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. திருச்சூரில் மட்டும் 80-க்கும் அதிகமான கூட்டுறவு வங்கிகளில் இந்த கொள்ளை நடந்துள்ளது. திருச்சூரில் சி.பி.எம் மாவட்ட செயலாளர் பெயரில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் ஊழல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சி.எம்.ஆர்.எல் கம்பெனி மூலமாக மோசடி செய்ததாக முதல்வர் மற்றும் முதல்வரின் மகள்மீது குற்றச்சாட்டு உள்ளது. மோடி அரசு தலையிடாமல் இருந்தால், இந்த வழக்கு பற்றி வெளி உலகம் அறியாமலே இருந்திருக்கும். கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணங்களை திரும்ப கொடுப்பதாக முதல்வர் பொய் சொல்கிறார். ஆனால் நரேந்திர மோடி சொல்கிறேன் கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடத்திய ஒருவரையும் சும்மா விட மாட்டேன். அனைவரது பணமும் திரும்ப வழங்கப்படும் என்று மோடியின் கேரண்டியாக சொல்லுகிறேன். இதுபோன்று கொள்ளையடிப்பவர்களால் கேரளாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது. கேரளாவின் கஜானா காலியாக உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளமும், பென்சனும் வழங்குவதற்கு கேரள அரசு கையில் பணம் இல்லை. கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கும் பணத்தை கடனை அடைப்பதற்காக மட்டுமே மாநில அரசு பயன்படுத்துகிறது” என்றார்.