தேர்தல் கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானின் பலோடி நகரம் முதலிடம் வகிக்கிறது. இங்கு சொல்லப்படும் கணிப்புகள் பெரும்பாலும் நிஜமாகின்றன. உப்பு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்ற நகரம் பலோடி. ஜோத்பூரிலிருந்து 142 கி.மீ. தொலைவில் உள்ள தார் பாலைவனத்தின் இடையில் அமைந்துள்ள இந்த நகரத்தில் ஏராளமான ஆலைகள் அமைந்துள்ளன.
அதேபோன்று, அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் கருத்து கணிப்புகளை நடத்தும் சாட்டா பஜாரும் இங்குதான் அமைந்துள்ளது. பலோடி மிகப்பெரிய அதேநேரம் மிக நுணுக்கமாக கணிக்கும் சூதாட்டக்காரர்கள் நிறைந்த நகரமாக உள்ளது. இங்கு நடைபெறும் கருத்து கணிப்புகளில் தவறு ஏற்படுவது அரிதிலும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பலோடி சாட்டா பஜாரில் நடைபெற்ற கருத்து கணிப்பில் கடந்த நவம்பர்-டிசம்பர் 2023-ல் ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜகவுக்கு 110-112 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைப்போலவே, ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. அதேபோல சத்தீஸ்கரிலும் பாஜகவுக்கு 50-52 இடங்களும் ,காங்கிரஸுக்கு 37-39 இடங்களும் கிடைக்கும் என்ற கணிப்பும் மெய்யானது. சத்தீஸ்கரில் 53 இடங்களை வென்று பாஜக ஆட்சியமைத்தது.
2022-ல் நடைபெற்ற தேர்தலில் குஜராத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆணித்தரமாக கூறியதுடன், இமாச்சல பிரதேசத்தில் கடும் இழுபறி ஏற்படும் என்று சாட்டா பஜார் வெளியிட்ட கருத்து கணிப்பு முற்றிலும் உண்மையானது.
பலோடியின் சாட்டா பஜாரில் அரசியல் மட்டுமின்றி மழை, கிரிக்கெட் என பல்வேறு வகையான பந்தயங்களும் நடைபெறுகின்றன. இதில், கோடிக்கணக்கில் பணம் புரளுகின்றன. மக்கள் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ பந்தயம் கட்டி, போன் வாலெட்டுகள் மூலம் தங்கள் வெகுமதியைப் பெறுகின்றனர்.
பலோடி சாட்டா பஜாரின் சமீபத்திய கணிப்புகளின்படி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக குறைந்தது 330-333 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸுக்கு 41-43 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 350 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி ஒரு ரூபாய் பந்தயம் கட்டினால் ரூ.3 தருவதாகவும், 400 இடங்களைப் பிடிக்கும் என்று கூறி கட்டப்படும் தொகைக்கு ரூபாய்க்கு ரூ.12- ரூ.15 தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று கூறி பணம் கட்டுபவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ.4-5 தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாஜக தனித்து 400 இடங்களை வெல்வது சாத்தியமில்லை என்பதை இங்கு பந்தயத்தில் ஈடுபடுவோர் உண்மையாக நம்புகின்றனர்.