இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது. `மறந்துவிடாதீர்கள்… மறந்தும் இருந்துவிடாதீர்கள்’ என்று அரசியல் கட்சிகள் தொடங்கி, தேர்தல் ஆணையம் வரை கூவிக் கூவி அழைக்கின்றன, வாக்களிப்பதற்காக!
ஆர்வத்தோடு வாக்களிப்பவர்கள், ஜனநாயகக் கடமையைத் தவறவிடக் கூடாது என்று வாக்களிப்பவர்கள், வற்புறுத்தலுக்காக வாக்களிப்பவர்கள் என்று பெருங்கூட்டமே வாக்களிக்கவிருக்கிறது. அதேசமயம், `வசதி வாய்ப்பில்லை… விடுமுறை இல்லை… ஆமா, ஓட்டுப்போட்டு என்ன வாழுது?’ என்பது போன்ற காரணங்களுக்காக அதிரவைக்கும் அளவிலானவர்கள் வாக்களிப்பதில்லை என்பது தெரியுமா?
2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தியாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 94 கோடி. இவர்களில் சுமார் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை. இப்படி வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்களில் முதலிடத்தில் இருப்பது, வயிற்றுப் பிழைப்புக்காக வேலைத் தேடி வெவ்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள்தான். குறிப்பாக, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், அஸ்ஸாம் என வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களில் வசிக்கும் கோடிக்கணக்கானவர்கள், வாக்களிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள நெட்டூர் என்ற பகுதியில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தல், நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை மே மாதம் 13-ம் தேதி தொடங்கி, நான்கு கட்டங்களாக அங்கே நிகழவிருக்கின்றன. ஆனாலும், “வாக்களிப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்லப்போவதில்லை’’ என்கின்றனர் பெரும்பாலானோர்.
“ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள சுரதா என்னுடைய சொந்த ஊர். தற்போது வேலை பார்த்துவரும் கேரளாவின் நெட்டூரிலிருந்து சொந்த ஊர் 1,800 கி.மீ தொலைவில் இருக்கிறது. ஓட்டுப்போடுவதற்காக அவ்வளவு தூரம் பயணித்தால், அதற்கு அதிக செலவு பிடிக்கும். அதுமட்டுமல்ல, தற்போது பார்த்துவரும் வேலையும் பறிபோகக்கூடும். அதனால், நான் ஓட்டுப்போடச் செல்லப்போவ தில்லை” என்கிறார் கட்டட வேலை பார்த்து வரும் 40 வயதான கார்த்திக் நாயக்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிக்கின்றனர். ஆனாலும், தேர்தலின்போது வாக்களிப்பது என்பது பலருக்கும் போராட்டமாகவே இருக்கிறது. இதற்காக விடுப்பு எடுக்கும் நாள்களில் ஊதியத்தை இழக்கவேண்டியிருக்கிறது. ஊருக்குச் சென்று திரும்ப, பணம் செலவழிக்கவேண்டியிருக்கிறது. இதெல்லாம் பொருளாதாரரீதியில் பேரிழப்பு என்பதால், வாக்களிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
இதைப் பற்றிப் பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள், “2019-ல் நடந்த பொதுத்தேர்தலில் வாக்களிக்காத 30 கோடிப் பேருமே புலம்பெயர் தொழிலாளர்கள் அல்ல. சொந்த மாநிலத்திலேயே, சொந்த மாவட்டத்திலேயே வெவ்வேறு ஊர்களில் பணிச்சூழல் காரணமாகத் தங்கியிருப்பவர்கள், ஓட்டுப்போடுவதை வேண்டுமென்றே தவிர்ப்பவர்கள், எதிர்பாராதவிதமாக வாக்களிக்க முடியாமல் போனவர்களும் இதில் அடக்கம். புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் விடுப்பு கிடைக்காதது, மீறிச் சென்றால், வேலையே பறிபோகக்கூடிய நிலை உள்ளிட்ட காரணங்களால்தான், வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
“ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு செலுத்தும் விகிதம் குறைவதற்கு, புலம்பெயர் தொழிலாளர்கள், நாட்டுக்குள்ளேயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு உள் குடியேற்றம் செய்வதும் முக்கியக் காரணமாக இருக்கிறது” என்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
இதைச் சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்.வி.எம் (RVM – Multi-constituency prototype Remote Electronic Voting Machine) என்ற உள் நாட்டுக்குள்ளேயே தொலைதூரத்திலிருப்பவர்கள் வாக்களிக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்வது குறித்த ஆலோசனையை முன்வைத்தது. அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு, பின்னூட்டம் பெறவும் முயற்சி செய்தது. அதேசமயம், `உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தோருக்குத் தொலைதூர வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என்று கடந்த ஆண்டு, மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டது, மத்திய அரசு.
இதைப் பற்றிப் பேசும் செயற்பாட்டாளர்கள், “வேலை செய்துவரும் இடத்தில் இருந்தபடியே வாக்களிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தராமல் இருப்பது, அவர்களுடைய ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்குச் சமம். எதிர்காலத்திலாவது இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்கு செலுத்தும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறையவே செய்யும்” என்று கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 97 கோடி. இவர்களில் எத்தனை கோடிப் பேர், இந்த முறை வாக்களிக்காமல் இருக்கப்போகிறார்களோ?