மும்பை பாந்த்ராவில் நேற்று அதிகாலையில் நடிகர் சல்மான் கான் வீட்டின்மீது பைக்கில் வந்த இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கியால் சுட அவர்கள் வந்த பைக் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து சல்மான் கானுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அதோடு மும்பை போலீஸ் கமிஷனருடனும் முதல்வர் இது குறித்து பேசி சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டார். உயர் போலீஸ் அதிகார்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதோடு சல்மான் கான் வீட்டிற்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று சல்மான் கான் வீட்டிற்கு சென்று விசாரித்து விட்டு வந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சல்மான் கானுக்கு நீண்ட நாள்களாக கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருப்பது தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் பெயர் விஷால் என்று தெரியவந்துள்ளது. ஏற்கெனவே குருகிராம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சச்சின் முஞ்சால் என்பவரை கொலைசெய்த வழக்கில் விஷால் தேடப்பட்டு வருகிறான். தற்போது ராஜஸ்தானில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை வழிநடத்தி வரும் ரோஹித் கோதாரா என்பவனின் கீழ் விஷால் செயல்பட்டு வருகிறான்.
துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேரும் மும்பையில் இருந்து தப்பிவிட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது சல்மான் கான் வீட்டில்தான் இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். முன்னதாக லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இத்துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்றுள்ளார். இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் `இது ஆரம்பம் தான். எங்களது திறமையை தெரிந்து கொள்ளுங்கள். இது இறுதி எச்சரிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.