Sydney: சிட்னி தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக் குத்து… மூன்று நாள்களில் இரண்டாவது அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவின் (Australia) மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் (Sydney), கடந்த சனிக்கிழமை வெஸ்ட்ஃபீல்ட் மால் ஷாப்பிங் சென்டரில் ஒருவர் திடீரென அங்கிருந்த நபர்கள் மீது துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில், பொதுமக்களில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம், இந்த தாக்குதலின்போது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிட்னி தேவாலயம் – கத்திக் குத்து சம்பவம்

இந்த சம்பவத்தின் பரபரப்பே ஓயாத நிலையில், அதே சிட்னியில் இன்று தேவாலயம் ஒன்றில் மர்ம நபர் பாதிரியாரைக் கத்தியால் குத்திய சம்பவம், மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, சிட்னியின் மேற்கு நகரமான வேக்லியில் (Wakeley), கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் (Christ The Good Shepherd) பிரார்த்தனைக் கூட்டத்தின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், `பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அமைதியாக அவருக்கு எதிரில் வந்த நபர் திடீரென பாதிரியாரைக் கத்தியால் சரமாரியாகக் குத்துகிறார்’. தேவாலயத்தில் நடந்த திடீர் சம்பவத்தில் நல்ல வேளையாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. பாதிரியார் உட்பட தாக்குதலைத் தடுக்கச் சென்ற பலரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

இன்னொருபக்கம், சம்பவத்தின் போதே அவசர அழைப்பைப் பெற்ற போலீஸார், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபரைக் கைதுசெய்து, காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. போலீஸார் தற்போது கைதுசெய்யப்பட்ட நபரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மூன்று நாள்களில் இவ்வாறு இரண்டு சம்பவங்கள் நடந்திருப்பது, சிட்னியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.