டெஹ்ரான்: இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். பிரதமர் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் சேனல் 12 செய்தியின்படி, ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் அது முழுமையான போருக்கு வித்திட்டுவிடக் கூடாது என்ற வகையில் போர் விவகாரங்கள் அமைச்சகம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன. இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களில் 80-ஐ அமெரிக்கா வீழ்த்தியது. ஈரான், ஏமனில் இருந்து ஏவப்பட்ட 6 ஏவுகணைகளை வீழ்த்தியது. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
“மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது. அமைதியை நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார்.