தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக இன்று (16) மற்றும் நாளை (17) விசேட பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சின் பணிப்புரைக்கமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பலாங்கொடை, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, சிலாபய், எம்பிலிபிட்டிய, கதுரேவெல, ஹட்டன், நுவரெலியா, வெலிமடை, கண்டி, குருநாகல், மொனராகலை போன்ற இடங்களிலிருந்து இந்த விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – கொழும்பு, மாத்தறை – மகும்புர, மாத்தறை – கடுவெல, மாத்தறை – கடவத்தை, மாத்தறை – பாணந்துறை, காலி – மாகும்புர, காலி – கடுவெல, காலி – கடவத்தை, தங்காலை – கொழும்பு, எம்பிலிப்பிட்டிய – கொழும்பு, எல்பிட்டிய – மாகும்புர, அம்பலாங்கொட – மாத்தறை போன்ற இடங்களிலிருந்து பஸ்கள் புறப்படுகின்றன. இந்தப் பகுதிகளிலிருந்து 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் புறப்படுகின்றன.
அத்துடன் பஸ் சேவையை போன்று விசேட ரயில் சேவையும் சேவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (16) காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி முதல் புகையிரதம் புறப்படுவதுடன், காலை 07.45 மணிக்கு விசேட புகையிரதம் ஒன்றும் புறப்படும். அத்துடன், வழமை போன்று காலை 08.45, 10.15 மற்றும் மாலை 5.20 மணிக்கு கொழும்பு நோக்கி விசேட புகையிரதமும் மாலை 6.30 மணிக்கு மற்றுமொரு புகையிரதமும் புறப்படும். மேலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை, மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை, பெலியத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரை விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.