ஈரானுக்கு எதிரான பதிலடி தேவையா…? இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கருத்து

டெல் அவிவ்,

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1-ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்து உள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹத் ஆல்மர்ட் கூறும்போது, இஸ்ரேல் வான் பாதுகாப்பு பகுதியில் திறமையாக செயல்பட்டு, ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இது இஸ்ரேலுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதுடன், ஈரானியர்களின் மதிப்பை இழக்கும்படியும் செய்துள்ளது.

ஈரானை நாங்கள் தோற்கடித்து விட்டோம். அவர்களை முட்டாள் என உணர செய்து விட்டோம் என்று கூறினார். இஸ்ரேலுக்கு எதிராக ஆத்திரமூட்ட கூடிய வகையில் ஈரான் தாக்குதலை தொடங்கியது. ஆனால், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு, ஆச்சரியம் ஏற்படுத்துகிற வகையில் வெற்றியை ஈட்டி தந்துள்ளனர்.

அதனால், இஸ்ரேல் அரசு பதிலடி கொடுக்க தேவையில்லை. எனது எண்ணப்படி நாங்கள் வெற்றியடைந்து விட்டோம். இந்த சண்டையை நாங்கள் சுமந்து திரிய வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானியர்கள் எப்போதும் நம்ப தகுந்தவர்கள். நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று அவர்கள் அறிவித்தனர். அதேபோன்று செய்தனர். இந்த தாக்குதலை முடித்து விட்டோம் என அவர்கள் அறிவித்து உள்ளனர். இதனை தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

எனினும், எவரோ சிலர், ஏதோ ஒரு காரணத்திற்காக தாக்குதல் நடத்த முடிவு மேற்கொண்டால், அதனை எதிர்கொள்ள அனைத்து விசயங்களையும் இஸ்ரேல் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, காசாவில் பல மாதங்களாக நீடித்து வரும் இந்த போரால், 34 ஆயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இரு நாடு தீர்வு அடிப்படையில், நீண்ட அமைதி ஏற்படுத்த வேண்டும் என அவர் அழைப்பும் விட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியபோது, நெதன்யாகுவுக்கு எதிராக ஆல்மர்ட் தனது கண்டனங்களை வெளியிட்டார்.

நெதன்யாகுவின் ஆணவமே, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த காரணம் என அப்போது அவர் குற்றச்சாட்டாக கூறினார்.

காசா மீது நாம் படையெடுக்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ தேவையில்லை. இஸ்ரேல் மக்களை கொடூர முறையில் படுகொலை செய்த பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அப்போது அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.