சென்னை: நூறு சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்ய, பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது குறித்து, பல்வேறு வணிக சங்கங்கள், தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலக கருத்தரங்க கூடத்தில், நேற்று கூடுதல் தொழிலாளர் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர் தே.விமலநாதன் தலைமையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்க கூட்டமைப்புகள், வேலையளிப்பவர் சங்க கூட்டமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, வாக்குபதிவு நாளான ஏப்.19-ம் தேதி அனைத்து தரப்பு தொழிலகங்களும், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டியது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து தொழிலாளர் துறையின் மூலம் கண்காணிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு, தொலைபேசி எண்கள் பத்திரிகை செய்தி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்தெரிவிக்கப்பட்டது.
மேலும், தொழிலாளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையை மேற்கொண்டு வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு வழங்க வேலை அளிப்பவர் தரப்பு பிரதிநிதிகள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் வேலையளிப்பவர்கள் கூட்டமைப்பு சார்பில் 100 சதவீதம் வாக்கு பதிவை உறுதி செய்வது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளை தாங்கள் கடைபிடித்து விடுப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.