காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை மனதில் வைத்து பலமுறை தமிழகம் வந்து செல்கிறார். முகமது கஜினி இந்தியாவுக்கு பலமுறை வந்து கொள்ளையடித்து சென்றதுபோல, இப்போது மோடி தமிழகத்துக்கு படையெடுத்து வருகிறார். ஆனால் அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாது. காமராஜர் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது மோடியின் முன்னோர்கள் அவரைக் கொலை செய்ய முயன்றனர். அந்த வழியில் வந்த மோடி, காமராஜர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகும் என மோடி சொல்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். புதிதாக தமிழ்மொழி மீது அக்கறை காட்டுவதாக நாடகம் நடத்துகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியில் வெளியிடப்படும் திட்டங்கள் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும். ஆனால், பாஜக ஆட்சி காலத்தில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் முடிந்த அத்தியாயத்தை பாஜக எழுதிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதி தெரியாமல், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்து வருகிறார் அண்ணாமலை. இதை தட்டிக் கேட்ட தேர்தல் அலுவலர்களை அசிங்கமாக பேசி உள்ளார். இந்த தேர்தலோடு மோடியுடன் சேர்ந்து அண்ணாமலை காணாமல் போய்விடுவார்.
மாவட்டந்தோறும் 52 ஆயிரம் வீடுகள் கட்டி இருப்பதாக பாஜக-வினர் பச்சை பொய் சொல்கிறார்கள். பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ள பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. ஆனால், 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க மோடி என்ன நடவடிக்கை எடுத்தார். கச்சத்தீவு மீது உண்மையான அக்கறை இருந்தால் மீட்டிருக்க வேண்டும்” என்றார்.