ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலிலும், 2019-ம் ஆண்டு தேர்தலில் ஓரளவுக்கு நாடு முழுவதும் மோடி அலை வீசிக் கொண்டிருந்த போதே, தமிழ்நாட்டு வாக்காளர்கள் பாஜகவுக்கு, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி எந்தக் குழப்பமும் இல்லை. பாஜகவுக்கு 370 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று கூறிய கருத்துக்கணிப்புகள் கூட தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று சொல்லிவிட்டன. ஆனால், பாஜகவுக்கு இந்தியா முழுவதும், அவர்கள் சொல்கின்ற அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்கிற சந்தேகம் தமிழ்நாடு மக்களுக்கு உள்ளது.
‘மோடியும் அமித்ஷாவும் ஊடகங்களை வளைத்துப்போட்டு, ஆதரவு நிலவுவதுபோல காட்டுகின்றனர்’ என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கின்றனர். இதை வலுவூட்டுவது போல அண்மையில் வெளிவந்த இரண்டு கருத்துக் கணிப்பு முடிவுகள் இருக்கின்றன.
Centre for the Study of Developing Societies நிறுவனம் நீண்ட காலமாக, துல்லியமாகப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் முறையைக் கையாண்டு பெயர்பெற்ற நிறுவனம். அது ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் மனநிலையை ஆராய்ந்து, முடிவுகளை வெளியிட்டு வருகின்றது. இந்த முறை ‘லோக்நீதி’ என்ற ஆய்வுத் திட்டத்தில் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுத்திட்டத்தில், 2024 பொதுத்தேர்தலில் முக்கியமான பிரச்னைகளாக எவற்றை மக்கள் கருதுகின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதில், 27 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மைதான் முக்கியப் பிரச்சினை என்றும், 23 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வு முக்கியமான சிக்கல் என்றும், 55 சதவிகிதம் பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இந்த விவரங்கள் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதை காட்டுகின்றது.
ஆயினும், தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்கு அளிக்க உள்ளார்கள் என்பதில் தொடர்ந்து மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வருவதாகவும் லோக்நீதி ஆய்வு கூறியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ‘பாஜக பெரும்பான்மை பெறாது என்றாலும், மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடும்’ என்ற நிலை நிலவியதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், ‘இப்போது அந்த நிலை இல்லை’ என்று கூறுகிறது.
பாசிச பாஜக முன்வைக்கும் ஊழல் ஒழிப்பு பிரசாரம் எடுபடவில்லை. ஏனென்றால், அந்தக் கட்சியில் சேர்ந்தவுடன் பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீதான வழக்குகள் அதே வேகத்தில் நடைபெறவில்லை அல்லது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் போக்கில் கெஜ்ரிவால் கைது, பாஜக மீது மக்கள் சந்தேகம் கொள்ள வழிவகுத்துவிட்டது. பாஜகவினர் பழிவாங்கினர் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளது.
”வளர்ச்சி” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் வந்த பாஜக, அதை நிறைவேற்றவில்லை என்றும் நினைக்கின்றனர். வட இந்தியாவின் பல இடங்களில் தொடர்ச்சியாக கலவரங்கள் நடந்துள்ளன. இது வட இந்திய மக்களை அயர்ச்சியடையச் செய்துள்ளது.
அமைதி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்கிற காரணங்களுக்காகத்தான் தமிழ்நாடு எப்போதும் ‘வேண்டாம் மோடி’ என வாக்களித்து வந்துள்ளது. இதன் காரணமாகவே, தமிழ்நாட்டு மக்களின் ‘வேண்டாம் மோடி’ என்கிற முழக்கம், இப்போது ‘வேண்டவே வேண்டாம் மீண்டும் மோடி’ என்று இந்தியா முழுவதும் உள்ள மக்களின் முழக்கம் ஆகிவிட்டதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தொலைநோக்கோடு, ‘மோடி வேண்டாம்’ என்கிற தமிழ்நாட்டின் ஒற்றை முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா கூட்டணி உருவாகக் காரணமாய் அமைந்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவருடைய வியூகம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது என்று தோன்றுகிறது.
இன்று மோடி அலை இல்லை. மோடி அயர்ச்சிதான் உள்ளது. இது உண்மையா, இல்லையா என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.