சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். அவர்களில், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் வர்மா, கிருஷ்ணா முராரி, தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர்.ஷா ஆகியோரும் அடங்குவர்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சில விமர்சகர்கள், திட்டமிட்ட அழுத்தம், பொய் தகவல் மூலம் நீதித்துறையை சிறுமைப்படுத்த முயன்று வருகிறார்கள். இவர்கள் குறுகிய அரசியல் நலனுடனும், தனிப்பட்ட ஆதாயம் கருதியும் செயல்படுகிறார்கள். நீதித்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை தகர்க்க போராடுகிறார்கள். கோர்ட்டுகள் மற்றும் நீதிபதிகளின் நேர்மை மீது சந்தேகம் எழுப்பி, நீதித்துறை நடவடிக்கையில் குறுக்கிடும் வகையில் நயவஞ்சக முறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகள், நீதித்துறையின் புனிதத்தன்மையை அவமதிப்பது மட்டுமின்றி, நீதிபதிகள் உறுதிமொழி எடுத்துள்ள பாரபட்சமற்ற கொள்கைக்கு நேரடி சவாலாகவும் அமைந்துள்ளன. தங்களுக்கு சாதகமான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீதித்துறையின் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

நீதித்துறைக்கு எதிராக பொதுமக்களின் கருத்துகளை கட்டமைக்க திட்டமிடுகிறார்கள். தங்கள் கருத்துக்கு உடன்பாடான தீர்ப்பு என்றால், நீதிபதிகளை புகழ்வதும், எதிரான தீர்ப்பு என்றால் நீதிபதிகளை வசைபாடுவதுமாக உள்ளனர். இத்தகைய அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை சுப்ரீம் கோா்ட்டு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த கடிதம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நீதித்துறைக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல், பா.ஜனதாவிடம் இருந்துதான் வந்துள்ளது. கடிதம் எழுதிய அனைவரும் மோடி ஆதரவு நீதிபதிகள். சமீபகாலமாக தனது பலத்தை காட்டி வரும் நீதித்துறையை அச்சுறுத்தவும், மிரட்டவும் பிரதமரின் திட்டமிட்ட பிரசாரத்தின் ஒரு அங்கம்தான் இந்த கடிதம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.