கிருஷ்ணகிரி: “திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை” என்று கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியது: “எங்களின் தேர்தல் அறிக்கையில் உலககெங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு அமையங்கள் உருவாக்குவதாக அறிவித்துள்ளோம். சுதந்திரத்துக்குப் பிறகு 75 ஆண்டுகளில் இந்தியா நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு பெரும்பாலான அரசாங்கங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு, தேவையான வேகத்திலும் செயல்படவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு வந்ததில் இருந்து, நாடு வளர்ச்சிப் பாதையில் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் விளைவுகள் இப்போது ஒவ்வொன்றாக வெளியில் வரத் தொடங்கியுள்ளன.
உலகின் 5-வது பொருளாதார நாடாக திகழ்வதுடன், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வருகின்றன. தமிழகத்துக்கும் ஏராளாமான முதலீடுகள் வந்துள்ளன. 2014-ம் ஆண்டில் நாட்டின் 92 சதவீத மொபைல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இன்று இந்தியாவில் இருந்து அதிகளவில் மொபைல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதேபோல் முன்பு நாம் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யும் நாடாக அறியப்பட்டோம். இன்று உலகின் முதல் 25 பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஐஎன்எஸ், விக்ராந்த் உள்ளிட்ட விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம். உற்பத்தி செய்வது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். 2014-ல் ரூ.600 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி, இன்று 21 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
5ஜி இணைப்பு உள்ள சில நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி 6ஜி-க்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளார். உலகின் மிக மலிவான மொபைல் டேட்டா சேவை, இந்தியாவில் கிடைக்கிறது. 2014-ம் ஆண்டில் பிராட்பேண்ட் இணைப்பு 20 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைலில் ஏற்பட்ட புரட்சியின் விளைவு இன்று சாமானிய குடிமகன் சிறிய பரிவார்த்தனைகள் கூட யூபிஎப் மூலம் டிஜிட்டல் முறையில் செய்து வருகிறார். மார்ச் 2024-ல், ஒரு மாதத்தில் சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள 1,344 கோடிக்கு அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாட்டில் நடந்துள்ளன.
மேலும் ஜன்தன், ஆதார், மொபைல் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வங்கி கணக்குகளுக்கு டிபிடி மூலம் ரூ.29 லட்சம் கோடி தொகையானது ஊழல் இல்லாமல் சென்றடைந்தது.
முன்பு தினசரி நாட்டில் 10-12 கி.மீ அமைக்கப்பட்ட சாலை, தற்போது வேகமாக 37-40 கி.மீ ரோடு அன்றாட வழக்கமாகி விட்டது. நாட்டின் கிட்டத்தட்ட 99 சதவீத கிராமபுறங்கள் நடைபாதை சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனையாகும். 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 3.5 லட்சம் கி.மீ கிராமபுற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 80,000 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் இன்று 148 விமான நிலையங்களாக உயர்ந்துள்ளது. இதேபோல் 7 எய்மஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில், தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன அல்லது கட்டப்பட்டு வருகின்றன.
பாஜக வாக்குகள் பெறுவதற்காவோ, ஆட்சி அமைப்பதற்காகவோ அரசியல் செய்ததில்லை. இந்த நாட்டையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப மட்டுமே அரசியல் செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் எங்களுடைய அரசியல் அடித்தளம் வலுவாக இல்லை. ஆனால், நாங்கள் இங்கே ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கினோம். நாட்டின் வளர்ச்சி கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு இளைஞம் அரசு மற்றும் தனியார் வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்பது இல்லை. துடிப்பான ஸ்டார்ட்-அப் கலாச்சாரமும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் என்பது மாறி அடுத்தவர்களுக்கு வேலைகள் உருவாக்குபவர்களாக மாறுவார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சியே எங்கள் முன்னுரிமை. வளர்ந்த இந்தியாவுக்கு தமிழகம் தலைமை தாங்க வேண்டிய தருணம் இன்று. ஆனால், தமிழகத்தை பழமையான சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கிறது திமுக. ஒட்டுமொத்த திமுகவும் குடும்ப நிறுவனமே தவிர வேறில்லை. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. தமிழக இளைஞர்களுக்கு பாஜக மட்டுமே துடிப்பு மிக்க விருப்பமாக விளங்குகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை… ஐபிஎஸ் அதிகாரியான இவர் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய அரசுப் பணியை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்தார். அவர் விரும்பியிருந்தால் திமுக, அதிமுகவில் எளிதில் உறுப்பினராகி, உயர் பதவியில் இருந்திருப்பார். ஆனால், அவர் தமிழகத்தின் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பாஜகவில் இணைந்தார்
ரூ.4600 கோடி மணல் கடத்தல் இழப்பு: தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழலை திமுக கொடுத்துள்ளது. தேசம் முதலில் என பாஜக சொல்கிறது. ஆனால், திமுக குடும்பமே முதலில் என்கிறது. ஊழலுக்கு திமுகவும், காங்கிரஸ் காப்புரிமை பெற்றுள்ளது. ஒட்டு மொத்த திமுக குடும்பமும் சேர்ந்து தமிழகத்தை சூறையாடுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4,600 கோடி மணல் கடத்தல்காரர்களால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தற்போதுதான் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அனுப்புகிறது மத்திய அரசு. இந்தப் பணமும் திமுகவின் ஊழலுக்கு இரையாகிறது.
தமிழகத்தை மட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்தை கூட திமுக காப்பாற்றவில்லை. பள்ளிக்கூடங்கள் கூட போதைப்பொருள் வியாபாரத்துக்கு பலியாகிவிட்டன. இந்த போதை மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள்? என்சிபியால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரருடன் எந்தக் குடும்பத்துக்கு தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினும் இந்து மதம் அவமதிப்பு: எதிர்கட்சிகள் பிரதமர் மீது தீய முறையில் தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் இங்கு மலரும். இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்து மதத்தை அவமதிக்க தொடங்கியுள்ளனர். பெண் சக்தியையும், தாய் சக்தியையும் அழித்து விடுவோம் என காங்கிரஸ், திமுகவின் இண்டியா கூட்டணி கூறுகிறது.
உதயநிதி ஸ்டாலினும் இந்து மதத்தை அவமதித்துள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். தமிழ் கலாசாரத்தின் அடையாளமான புனித செங்கோலை மக்களவையில் நிறுவுவதை எதிர்த்தனர். புனிதமான செங்கோல் இங்குள்ள மடங்களுடன் தொடர்புடையது. அதை வேண்டும் என்றே அவமதிக்கிறார்கள்.
திமுகவை தண்டிக்க வேண்டும்: இண்டியா கூட்டணி பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு தமிழகம் சாட்சி. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டார்கள். இதுதான் திமுகவின் உண்மையான முகம். அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் எதிர்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. வருகிற 19-ம் தேதி இங்குள்ள மகளிர் படை திமுகவின் பெண்களுக்கு எதிரான மனநிலைக்கு எதிராக வாக்களித்து அவர்களை தண்டிக்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சி ஜெயலலிதா பங்கு: தமிழகத்துக்கு நான் வரும் போதெல்லாம் ஜெயலலிதா அம்மையார் தான் நினைவுக்கு வருவார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் பெரும்பங்கு ஆற்றியவர். ஏழைகளுக்கான கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. எப்போதும் இருக்கும். சி.ராஜகோபாலாச்சாரி, காமராஜர், எம்ஜிஆர் போன்ற மகத்தான தலைவர்களை தந்த பூமி தமிழகம். அரசியல் சாசனம், அரசியலில் நேர்மை, மதிய உணவு, நலத்திட்டங்கள் என எதுவாக இருந்தாலும் இவர்கள் எங்களுக்கு பெரும் உத்வேகமாக இருந்துள்ளனர்.
பிரதமர் மோடியும் இந்த தலைவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அவர்களின் வழியில் மோடி சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்க பாடுபடுகிறார். தமிழகத்தில் லட்சக்கணக்கான மீனவர்கள் வாழ்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டனர். பல சமயங்களில் அவர்கள் உயிர் இழக்கவும் நேரிட்டது. ஆனால் முதல் முறையாக இலங்கையுடன் நல்லுறவை பயன்படுத்தி மீனவர் சமூகத்துக்கு நிவாரணம் வழங்கும் அரசு நாட்டில் உள்ளது. காங்கிரஸ் இந்த நாட்டில் இது போன்ற பல தவறுகளை செய்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கச்சத்தீவு இழப்பு, மீனவர் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு திமுக – காங்கிரஸ் தான் முழு பொறுப்பு. இந்திய தமிழக மீனவர்களின் கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாக கொடுத்தது இண்டியா கூட்டணியின் காங்கிரஸ். இவர்கள் எந்த வாயை வைத்துக் கொண்டு தமிழர்களின் உரிமை பற்றி பேசுகிறார்கள். போராடுகிறார்கள்.
இண்டியா கூட்டணி நிரந்தரம் ஆனது இல்லை. தேர்தல் தொடங்கும் முன்பே அவர்களுக்குள் சண்டையிட்டு கொள்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைவதற்கு ஒரே காரணம் அதிகாரம் தான். தமிழகத்தை திமுக மற்றும் காங்கிரஸால் வளர்க்க முடியுமா என்றால் இல்லை. திமுக தனது குடும்பம்தான் முதல் என்கிற சுயநலம் கொண்ட சிந்தனைக்கு மேல் வேறு ஏதாவது சிந்திக்க முடியுமா என்றால் இல்லை.
இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளதா என்றால் பதில் இல்லை. காங்கிரஸ் – திமுக இண்டியா கூட்டணி இந்தியாவின் தேச பாதுகாப்பை பலப்படுத்தப் போவதுமில்லை. தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி நீடிக்கப் போவதுமில்லை. அதிகாரமும் பதவியும் இன்றி இந்த கூட்டணி நிலைக்காது. உங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை நீங்கள் வீணடிக்க கூடாது” என்று அவர் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு, பாஜக மாவட்ட தலைவர்கள் சிவப்பிரகாஷ், நாகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.