சென்னை: தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை தி.நகர் சட்டப்பேரவை தொகுதி முழுவதும் நேற்று முன்தினம் இருசக்கர வாகன பேரணி நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தி.நகர் சட்டப்பேரவை தொகுதி திமுகவின் கோட்டை. தி.நகரில் எங்கு திரும்பினாலும் திமுக அரசின் சாதனை திட்டங்கள்தான் நினைவுக்கு வரும்.
இந்த 5 ஆண்டுகள் தென் சென்னை மக்களவை உறுப்பினராக மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். மிக்ஜாம் புயல் கன மழை என எல்லா நேரங்களிலும் உங்களோடு களத்தில் இருந்து பணியாற்றி இருக்கிறேன். திமுக ஆட்சி அமைவதற்கு முன்பு வரை மழை பெய்தால் தி.நகர் முழுவதும் இடுப்பளவு தண்ணீர் நிற்கும்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு, இப்போது மழை பெய்தால் அடுத்த ஒரு சிலமணி நேரங்களில் மழை பெய்த சுவடே தெரியாமல் தண்ணீர் வடிந்து விடுகின்றது. இப்பகுதியின் பிரதான பிரச்சினையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசிடம் அழுத்தம் கொடுத்து அடுக்குமாடி கார் நிறுத்தங்கள் இப்பகுதியில் அமைக்கப்படும். தி.நகரில் பள்ளி கட்டிடம், பேருந்து நிழற்குடைகள் என பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதி நிதியை ஒதுக்கியுள்ளேன்.
இப்போது நீங்கள் எனக்கு அளிக்கும் எழுச்சியான வரவேற்பை பார்க்கும் போது குறைந்தது இந்த தி.நகர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். பிரச்சாரத்தின் போது திமுக எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி உடன் இருந்தார்.