இலவசமாக வீடியோக்களை பார்க்கும் மிகவும் பிரபலமான தளமாக யூடியூப் இருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணகான பயனர்களைக் கொண்ட இந்த தளம், வருமானம் ஈட்ட உகந்த தளமாகவும் இருக்கிறது. இதனால் பல லட்சக்கணகான இளைஞர்கள் முதல் குடும்ப தலைவிகள் வரை யூடியூப் தளத்தில் வீடியோ போடுவதை முழுநேர தொழிலாகவே கொண்டிருக்கின்றனர். வீடியோக்களில் இடையே வரும் விளம்பரம் தான் யூடியூப்புக்கும், யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் வருமானம். ஆனால், இதனை பைபாஸ் செய்ய பல மூன்றாம் தரப்பு செயலிகள் இருக்கின்றனர். இந்த செயலிகளைக் கொண்டு நீங்கள் யூடியூப் வீடியோக்களின் இடையில் எந்த விளம்பரமும் இல்லாம் இலவசமாக வீடியோக்களை பார்த்துவிட முடியும்.
இது யூடியூப்புக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. அதனால், இப்பிரச்சனையை சரிசெய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த அந்த நிறுவனம், இப்போது புதிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது. மூன்றாம் தரப்பு செயலிகளிலிருந்து YouTube விளம்பரங்களைத் தடுக்கும் பயனர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறது யூடியூப். அதாவது, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் யூடியூப் வீடியோக்களை பார்க்கும் யூசர்களை தடை செய்ய தொடங்கியுள்ளது அந்த நிறுவனம்.
மூன்றாம் தரப்பு செயலியில் வீடியோ பார்க்கும்போது, அவர்களுக்கு வீடியோ பார்ப்பதில் பிரச்சனை எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் அத்தகைய பயனர்களை அடையாளம் கண்டு அவர்களை பிளாக் செய்யவும் இருக்கிறது யூடியூப். இது குறித்து யூடியூப் நிறுவனம் விடுத்திருக்கும் எச்சரிக்கையில், இந்த விதிமுறைகளை மீறும் பயனரைக் கண்டறிந்தால், அவரைத் தடை செய்வோம் என்று YouTube தெரிவித்துள்ளது. விளம்பரமில்லா வீடியோக்களைப் பார்க்க, யூடியூப் பிரீமியத்திற்கு குழுசேருமாறு பயனர்களை YouTube வலியுறுத்தியுள்ளது.
தங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களின் வீடியோக்களைப் பார்க்கும்போது விளம்பரங்களால் தொந்தரவு ஏற்படுகிறது என யூசர்கள் கருதினால், யூடியூப் பிரீமியத்தைத் தேர்வுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம், விளம்பரத் தடுப்பான்களுக்கு (AD Blocker) எதிரான போராட்டத்தில் யூடியூப் இணைந்துள்ளதாகவும், இந்த முயற்சியில் ஆட் பிளாக்கர்களை முற்றிலுமாக தடை செய்யும் வரை தொடர்கிறது. அதேநேரத்தில் யூசர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக மாறியுள்ளது.